பட்டப்பின் படிப்பு பயிற்சிகளுக்காக வெளிநாடு செல்லும் டாக்டர்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரினால் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகத்துக்கு இது தொடர்பில் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. பட்டப் பின்படிப்பு, பயிற்சிக்காக வெளிநாடு செல்லும் டாக்டர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு,
விமான டிக்கெட்டுக்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அரசாங்கம் வழங்குகிறது. நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடி மற்றும் வெளிநாட்டு அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இந்தக் கொடுப்பனவை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வங்கி, சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்தே அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
அதேவேளை, பட்டப் பின் படிப்பு பயிற்சிகளுக்காக இந்தவருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டுக்கு சென்றுள்ள டாக்டர்களுக்கு மாத்திரம் செப்டெம்பர் மாதத்திற்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பயிற்சிகளுக்காக டாக்டர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தவும் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Discussion about this post