அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை ரயில் நிலையம் வரை நேற்று (9) காலை மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் யாழ்தேவி ரயில் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மஹோ முதல் ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் புனரமைப்புப் பணிகள் இந்திய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புனரமைப்புப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வவுனியாவிலிருந்து அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் ரயில் மார்க்கமும் வவுனியாவிலிருந்து ஓமந்தை வரையிலான 13 கிலோமீற்றர் ரயில் மார்க்கமும் 91.27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புனரமைக்கப்பட்டது. அபிவிருத்தித் திட்டம் நிறைவடைந்ததையடுத்து, இந்த ரயில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதோடு, யாழ்தேவி ரயில் இந்த இலக்கை நேற்று எட்டியுள்ளது.யாழ்தேவி அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து காலை 10.23 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்து மணிக்கு 80 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரை ஓமந்தை நோக்கி பயணித்து மீண்டும் ஓமந்தையிலிருந்து அனுராதபுரம் வரை அதே வேகத்தில் பயணித்துள்ளது. பயணம் தொடங்கியதில் இருந்து மதவாச்சி மற்றும் வவுனியா ரயில் நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறை அதிகாரிகளும் அதில் பயணம் செய்தனர்.
இதேவேளை, ரயில் மார்க்கம் புனரமைப்பு பணிகள் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை-கொழும்பு புகையிரத சேவைகள் எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






Discussion about this post