வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (13) காலை மிக சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
காலை 6.00 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7.00 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளிப்பார்.
தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 9.45 மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடையவுள்ளார்.
இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபடுவர்.
நாளைய (14) காலை 7.00 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
நல்லூர் மகோற்சவம் கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நாளைய வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்று, அத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவுபெறும்.
Discussion about this post