20 அக்டோபர் 2023
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரின் விவரங்களை பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார்.
பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், எஸ் சுக்லா ஆகிய நால்வரும் இந்தியாவின் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
27.02.2024 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியாவின் விண்வெளி வீரர்கள் 3 நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு நடத்துவார்கள்.
ககன்யான் திட்டம் என்பது என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. ககன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வானம் என்று பொருள். வானத்தை நோக்கிச் செல்லும் வாகனம் என்ற பொருளில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படுவார்கள்.
ராக்கெட் ஏவும் வாகனம் மார்க் -3 (LVM-3) மூலம் செலுத்தப்படும் இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டம் விண்வெளி ஆய்வில் உள்நாட்டு நிபுணத்துவம், இந்திய தொழில்துறையின் அனுபவம், இந்திய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவுசார் திறன்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்பில் இருந்து கிடைக்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்களைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்ட உத்தியின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
முதல் கட்ட சோதனையின் இலக்கு என்ன?
வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் அழைத்து வருவது மிகவும் சவாலான பணி. அதற்கான பல கட்ட தயாரிப்புகள் தேவைப்படுகின்றன.
மனிதர்களை அனுப்புவதற்கான குப்பியை எதிர்பாராத சவால்களில் இருந்து பாதுகாப்பதுதான் இப்போதைய ஆய்வின் நோக்கம். இந்தக் குப்பியில் 3 வீரர்கள் அமரலாம்.
ஏவுகணையை விண்ணுக்கு அனுப்பும்போது எதிர்பாராத விபத்துகள் நேரலாம். அவ்வாறான சூழலில் குப்பியை மட்டும் தனியாகப் பிரித்து பாதுகாப்பான விதத்தில் கடற்பரப்பில் விழச் செய்வதுதான் முதல் கட்ட ஆய்வின் இலக்கு.
அதற்காக ஜி.எஸ்.எல்.வி எம்.கே III ஏவுகணையில் குப்பியை இணைத்து சுமார் 17 கி.மீ உயரம் வரை பறக்கச் செய்து பின்னர் அதைத் தனியாகப் பிரித்து கடலில் வீழச் செய்து சோதித்துள்ளனர். அந்தக் குப்பியை மீட்டு வந்த பின்னர் அதன் பாதுகாப்புத் தன்மையைப் பரிசோதித்து அதற்கு ஏற்ற விதத்தில் மேம்படுத்துவார்கள்.
தற்போதைய நிலை என்ன?
கடந்த ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி ககன்யான் மாதிரி விண்கலம் டிவி-டி1(TV-D1) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மாதிரி சோதனை வெற்றிகரமாக முடிந்தவுடன் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இந்த டிவி-டி1 மிஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன் நோக்கம், ககன்யாம் திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள், அதிலிருந்து தப்பிக்கும் ஒரு வாகனப் பரிசோதனை இது. இது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, வீரர்களைக் கொண்டு செல்லும் வாகனம் வெற்றிகரமாக சோதனைக்கலனில் இருந்து பிரிந்து, குறித்த வேகத்தில் கடலில் விழுந்துள்ளது. அது தொடர்பான அனைத்து தரவுகளும் அந்த இயந்திரத்தில் உள்ளது. கடலில் விழுந்துள்ள இயந்திரம் மீட்கப்பட்டு, கப்பல் மூலமாகக் கொண்டுவரப்படும்,” என்றார்.
அந்த ராக்கெட்டின் மேலே ஒரு சிறப்புக் குப்பி இணைக்கப்பட்டிருந்தது. அதில்தான் மனிதர்கள் பாதுகாப்பாக இருத்தப்படுவார்கள். அவசரக் காலத்தில் விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்கான ஏற்பாடுகளும் அதில் இருந்தன. அது பெரிய காற்றுப்பை போன்றது. ஏவுகணை புறப்படுவதில் ஏதாவது பிரச்னை இருந்தால் குப்பியை விரைவாக வெளியே இழுத்துத் தள்ளுவதற்காக இந்த ஏற்பாடு.
முதல் கட்ட சோதனையில் ஏவுகணையின் சோதனைப் பறப்பு நடக்கிறதா என்று சரி பார்க்கப்பட்டது. அதன் பின்னர் குப்பியில் உள்ள பாராசூட் மற்றும் பிற மீட்பு அமைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டன.
இந்தப் பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு அவசியமான ஏராளமான படிப்பினைகளை இஸ்ரோ பெற்றிருக்கிறது.
ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?
திட்டத்தைச் செயல்படுத்த இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ள நிலையில் மேலும் பல்வேறு நிலைகளை ககன்யான் கடக்க வேண்டும்.
அடுத்து இதேபோல வாகனத்தைப் பரிசோதிப்பதற்கான D2, D3, D4 என்ற மூன்று சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பரிசோதனைகளின்போது அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விண்வெளியின் கடுமையான சூழல் மற்றும் கதிர்வீச்சு சாத்தியங்களை எதிர்கொள்ளும் திறன் உள்ளிட்டவை பரிசோதிக்கப்படும்.
பலகட்ட பரிசோதனைகளை முடித்து திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற சாதனையை இந்தியா எட்டிப்பிடிக்கும்.
ஏற்கெனவே நிலவில் தரையிறங்கி சாதித்த இந்தியாவிற்கு இது மற்றுமொரு முக்கிய சாதனையாக அமையும். மேலும் விண்வெளி ஆய்வில் அதன் வளர்ந்து வரும் திறன்களையும் நிரூப்பதாகவும் இது அமைந்திடும்.
BBC
Discussion about this post