இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்தியாவின் மும்பை துறைமுகத்தில் உள்ள சுங்கத் துறையினர், பாகிஸ்தானின் கராச்சிக்கு அனுப்பப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களைக் கைப்பற்றினர்.
அந்தப் பொருள் சீனாவில் இருந்து அனுப்பப்பட்டது. இத்தாலியின் ஜிகேடி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு நவீன கணினி எண் கட்டுப்பாடு (CNC) இயந்திரங்கள் அதில் அடங்கும்.
பாகிஸ்தான் தனது அணுசக்தித் திட்டத்தில் இந்த மீண்டும் பயன்படுத்தக்கூரிய பொருளைப் பயன்படுத்தலாம் என்று தி இந்து செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, அந்தப் பொருட்கள் தற்போது இந்தியாவின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முழு விஷயம் என்ன?
தி இந்து நாளிதழ் ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, ஜனவரி 9ஆம் தேதி, சிஎம்ஏ ஜிஜிஏ அட்டிலா என்ற வணிகக் கப்பல் சீனாவில் உள்ள ஷேகு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாகக் கூறியுள்ளது.
அந்தக் கப்பலில் மால்டா நாட்டின் கொடி இருந்தது. அது கராச்சி துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது, அங்கு இந்தப் பொருட்கள் காஸ்மோஸ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளன.
அந்தச் செய்தியில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரத்தின்படி, “இந்த ஆண்டு ஜனவரி 22 அன்று, கப்பல் மும்பையின் நவா ஷேவா துறைமுகத்தை (ஜவஹர்லால் நேரு துறைமுகம்) அடைந்தது, அங்கு சுங்கத்துறை அதிகாரிகள் தங்களுக்குக் கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அதைக் கைப்பற்றினர்.”
மற்றோர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, கப்பலில் உள்ள பொருட்கள் பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தி இந்து நாளிதழ் எழுதியுள்ளது, அதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (டிஆர்டிஓ) அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் குழு அதை ஆய்வு செய்தனர்.
ஏவுகணைக்குத் தேவையான உதிரிபாகங்கள் தயாரிப்பில் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது என டிஆர்டிஓ அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் 2022இல், இத்தாலியிடம் இருந்து தெர்மோ-எலக்ட்ரிக் பொருட்களை வாங்க பாகிஸ்தான் முயன்று வருவதாகவும், காஸ்மோஸ் இன்ஜினியரிங் நிறுவனமும் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகளை மேற்கோள் காட்டி தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நிறுவனத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.
முன்னதாக பிப்ரவரி 2020இல், சீனா ஒரு ஆட்டோகிளேவ் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப முயன்றது, அதை ‘தொழில்துறை உலர்த்தி’ என்று அழைத்தது. ஹாங்காங் கொடியுடன் பறக்கும் சீனாவின் டாய் சூய் யுன் கப்பலில் இருந்து இது கைப்பற்றப்பட்டது.
இந்தக் கப்பல் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் ஜியாங்யின் துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தானின் காசிம் துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டது. இதற்குப் பிறகு, பாகிஸ்தான் தனது ஏவுகணைத் திட்டத்துக்கான பொருட்களை சட்டவிரோதமாக கொள்முதல் செய்து விற்பனை செய்வதில் ஈடுபட்டதாக கவலை எழுந்தது.
சி.என்.சி இயந்திரங்கள் ஆயுத உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பான Wassenaar ஆட்சியின் கீழ் வருகின்றன. 1996இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம், சிவிலியன் மற்றும் ராணுவ இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களின் பெருக்கத்தைத் தடுப்பதாகும்.
வட கொரியா தனது அணுசக்தி திட்டத்தில் சிஎன்சி இயந்திரங்களைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post