தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக ஈனுலையின் எரிபொருள் நிரப்பப்படுவதை பிரதமர் மோதி பார்வையிட்டுள்ளார். ஆனால், இந்த ஈனுலை ஆபத்தானது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதில் உண்மையில் பிரச்னை இருக்கிறதா?
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதிவேக ஈனுலை
கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் இந்த முதலுறு அதிவேக ஈனுலை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) வடிவமைத்துச் செயல்படுத்துகிறது. அதிவேக ஈனுலைகளை உருவாக்கும் திட்டம் 1980களில் திட்டமிடப்பட்டது.
இதன் கட்டுமானப் பணிகள் 2004ஆம் ஆண்டில் துவங்கப்பட்டன. இந்தப் பணிகள் 2010ல் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு, ஒவ்வொரு ஆண்டாக இது தள்ளிச் சென்றது. கட்டுமானத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இந்தத் திட்டத்திற்கான செலவு கிட்டத்தட்ட இரு மடங்காகியிருக்கிறது. ஆரம்பத்தில் இந்தத் திட்டம் 3,492 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2019 நவம்பரில் இந்தத் திட்டத்திற்கான மதிப்பு 6,840 கோடி ரூபாயாக இருக்கும் என மாநிலங்கள் அவையில் அரசு தெரிவித்தது.
கடந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து குளிர்விப்பானான சோடியத்தை நிரப்பும் பணி, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் பத்தாம் தேதி துவங்கி 15ஆம் தேதி முடிக்கப்பட்டது. 2024 மார்ச் 4ஆம் தேதியன்று எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கிறது.
இந்த அணு உலை வெற்றிகரமாகச் செயல்படும் நிலையில், இந்தியாவில் அதிகம் கிடைக்கும் தோரியத்தை இந்த அணு உலையில் பயன்படுத்த முடியும். இந்த அணு உலை 500 மெகா வாட் உற்பத்தித் திறனைக் கொண்டது. 40 ஆண்டுகளுக்கு இந்த அணு உலை பயன்பாட்டில் இருக்கும்.
இந்த அணு உலையில் ஆரம்ப கட்டத்தில் யுரேனியமும் புளுட்டோனியமும் கலந்த எரிபொருள் பயன்படுத்தப்படும். எரிபொருள் தண்டுகளை தாராப்பூரில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் தயாரித்து அளிக்கும்.
சுற்றுச்சூழலியலாளர்கள் எதிர்ப்பு
சென்னைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, கல்பாக்கத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலுறு அதிவேக ஈனுலை (Prototype Fast Breeder Reactor – PFBR)ல் எரிபொருள் நிரப்பப்படுவதை பார்வையிட்டார்.
ஆனால், இந்த அதிவேக ஈனுலைகள் அமைக்கப்படுவதற்கு சுற்றுச்சூழலியலாளர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த அதிவேக ஈனுலைகள் எளிதில் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் கொண்டவை என்கிறார்கள் அவர்கள்.
இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அதை விட்டுவிட்டன. இந்த வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் பிரான்ஸ், ஜப்பான் நாடுகளில் இத்திட்டம் தாமதம் அல்லது கைவிடப்பட்டது” என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
“அதிவேக ஈனுலைகள் தேவையே இல்லை”
“அதிவேக ஈனுலைகளை உருவாக்கும் முயற்சியில் பல நாடுகள் தோற்றுவிட்டன. இந்த அதிவேக ஈனுலைகளில் திரவ சோடியம் கட்டுப்படுத்தும் காரணியாகவும் (Moderator) குளிர்விப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. திரவ சோடியம் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. ஈரம் பட்டாலே தீ விபத்து ஏற்படும் சாத்தியங்கள் இதில் உள்ளன. ஜப்பானின் மோஞ்சுவில் உள்ள அணு உலையில் இதேபோல, சோடியம்தான் குளிர்விப்பானாக பயன்படுத்தப்பட்டுவந்தது. 1995ல் அந்த அணு உலையில் சோடியம் செல்லும் பைப்பில் இருந்து, சோடியம் கசிந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
மேலும், யுரேனியத்தைப் பயன்படுத்தும் அணு உலைகளைவிட, இந்த அணு உலைக்கான செலவு மிக அதிகம். ஒரு காலகட்டத்தில் உலகில் யுரேனியம் மிக அரிதாகவே கிடைத்துவந்தது. அணு உலை எரிபொருளுக்கான தேவை அதிகம் இருந்ததால், இப்படி ஒரு தொழில்நுட்பம் யோசிக்கப்பட்டது. ஆனால், இப்போது பெரிய அளவில் யுரேனிய சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. ஆகவே இந்தத் திட்டத்திற்கான தேவையே இப்போது இல்லை” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ. சுந்தர்ராஜன்.
“அதிவேக ஈனுலை பற்றிய அச்சம் வேண்டாம்”
ஆனால், இந்த அணு உலை குறித்த அச்சங்கள் தேவையற்றவை என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியான முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன்.
“இந்த அதிவேக ஈனுலை குறித்த அச்சங்கள் தேவையற்றவை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இதேபோன்ற ‘Fast Breeder Test Reactor’ செயல்பட்டு வருகிறது. அதில் கிடைத்த அனுபவம் இந்த ஈனுலையை இயக்குவதற்கு உதவும். தவிர, இந்த சோதனை ரியாக்டரில் சோடியம் கசிந்து விபத்து ஏற்பட்டதில்லை. கடந்த ஐம்பதாண்டுகளில் ஆபத்து ஏற்படும் அளவுக்கு எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை.
உலகில் எல்லா அதிவேக ஈனுலைகளிலும் புளுட்டோனியத்தையே பயன்படுத்துகிறார்கள். நாம் தோரியத்தை பயன்படுத்துகிறோம். தோரியத்தை வைத்து அணுகுண்டு தயாரிக்க முடியாது” என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.
இந்த அணு உலை செயல்படும் விதம் குறித்தும் விளக்கும்போது, “இயற்கையில் யுரேனியம் இரண்டு விதங்களில் கிடைக்கும். ஒன்று யுரேனிம் – 235. மற்றொன்று யுரேனியம் 238. இதில் யுரேனியம் 235 மட்டுமே அணு உலைகளில் பயன்படும். இயற்கையில் 1/141 என்ற விகிதத்தில்தான் யுரேனியம் 235ம் யுரேயனியம் 238ம் கிடைக்கின்றன. அதிவேக ஈனுலைகளில் யுரேனியம் – 238ஐ blanketஆக பயன்படுத்தினால் அது, புளுட்டோனியம் 239ஆக மாறிவிடும். இதனை மீண்டும் எரிபொருளாக பயன்படுத்தலாம். அல்லது அணுஆயுதம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.
ஆனால் இங்குள்ள அதிவேக ஈனுலையில், தோரியம்தான் blanketஆக பயன்படுத்தப்படுகிறது. தோரியத்தை blanketஆக பயன்படுத்தினால் அது யுரேனியம் 233ஆக மாறிவிடும். இந்த யுரேனியம் 233ஐ மூன்றாம் கட்ட அணுஉலைகளில் எரிபொருளாக பயன்படுத்தலாம். இப்படி இன்னொரு அணு உலைக்கு எரிபொருள் தருவதால், இதனை ஈனுலைகள் என்கிறோம். இந்த யுரேனியம் 233ஐ வைத்து வைத்து அணுகுண்டு செய்ய முடியாது” என்கிறார்.
தற்போது உலகில் யுரேனியம் போதுமான அளவுக்குக் கிடைத்தாலும், இந்தியாவில் அது மிக அரிதாகவே கிடைக்கிறது. தோரியம் அதிக அளவில் கிடைக்கிறது. எனவே, எரிசக்தி பாதுகாப்பு எனும் நோக்கில் இந்த ஈனுலைகள் அவசியமானவைதான் என்கிறார் வெங்கடேஸ்வரன்.
அதிவேக ஈனுலை தயாரிக்கும் ‘பாவினி’ கூறுவது என்ன?
இந்த அதிவேக ஈனுலைகள் Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited – பாவினி – என்ற பொதுத்துறை நிறுவனத்திற்குச் சொந்தமானவை.
இந்தியாவில் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், யுரேனியத்தைக் குறைவாகவும் தோரியத்தை அதிகமாகவும் பயன்படுத்தும் வகையில் மூன்று கட்டங்களாக தனது அணுசக்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதாக பாவினி கூறுகிறது.
இதில் ஒவ்வொரு கட்டமும் அடுத்த கட்டத்தோடு தொடர்புடையவை. ஒரு கட்டத்தில் எரிக்கப்பட்ட எரிபொருள், அடுத்த கட்டத்தில் எரிபொருளாக பயன்படுத்தும் வகையில் இந்த அணுசக்தித் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக பாவினி கூறுகிறது.
அதன்படி, முதல் கட்டத்தில் அழுத்தமூட்டப்பட்ட கனநீர் அணு உலைகள் அமைக்கப்படும். இதில் யுரேனியம் எரிபொருளாக இருக்கும். இரண்டாம் கட்ட அதிவேக ஈனுலைகளில் புளுட்டோனியம் எரிபொருளாக இருக்கும். இதிலிருந்து யுரேனியம் -233 கிடைக்கும்.
மூன்றாவது கட்ட அணுஉலைகளில் முந்தைய கட்டத்தில் கிடைத்த யுரேனியம் – 233 எரிபொருளாக பயன்படுத்தப்படும் என்கிறது பாவினி.
Discussion about this post