`இதுவரை பல ஆளுமைகளின் வாழ்க்கைக்கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. அந்த வகையில் கோலிவுட்டில் தயாரான பயோபிக் திரைப்படங்களின் லிஸ்டை இங்கே
இசைஞானி இளையராஜாவின் பயோபிக் தயாராகிறது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் திரைக்கதை பணியைத் தான் மேற்கொள்வதாக அறிவித்திருக்கிறார் கமல்ஹாசன். இதுவரை பல ஆளுமைகளின் வாழ்க்கைக்கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. அந்த வகையில் கோலிவுட்டில் தயாரான பயோபிக் திரைப்படங்களின் லிஸ்டை இங்கே பார்க்கலாம்.
பெரியார்:
பெரியாரின் வாழ்க்கையை மையப்படுத்திக் கடந்த 2007-ம் ஆண்டு ‘பெரியார்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிகர் சத்யராஜ் பெரியாரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் ஞான ராஜசேகரன் இயக்கியிருந்தார். இதுமட்டுமின்றி இவர் பாரதியாரின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘பாரதி’ திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்புக்கு அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு நிதி வழங்கியிருந்தது.
காமராஜ்:
கடந்த 2004-ம் ஆண்டு ‘காமராஜ்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் காமராஜரின் கதாபாத்திரத்திற்கு ரிச்சர்ட் மதுராம் என்ற நடிகரைத் தேர்வு செய்து நடிக்க வைத்தார்கள். இந்தத் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தை இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கினார்.
ஏற்கெனவே இத்திரைப்படத்திற்கு முன்பு காமராஜரின் வாழ்க்கையை மையப்படுத்தி தொலைக்காட்சி தொடர்களையும் இவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் காமராஜராக நடித்திருக்கிற ரிச்சர்ட் மதுராம் இந்தியன் ஏர்லைன்ஸில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நடிகர் சாருஹாசன் ஒரு முறை ரிச்சர்ட் மதுராமைக் கண்டிருக்கிறார். அதன் பின்பு இயக்குநரிடம் ரிச்சர்ட் காமராஜரைப் போலவே தோற்றம் கொண்டிருக்கிறார் என இந்தத் திரைப்படத்திற்குப் பரிந்துரை செய்திருக்கிறார். அப்படித்தான் ‘காமராஜ்’ படம் உருவானது.
பாரதி:
பாரதியாரின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை இயக்குநர் ஞான ராஜசேகரன் இயக்கியிருந்தார். IAS அதிகாரியாகப் பணிபுரிந்தவர். இவரிடம், பள்ளி மாணவர் ஒருவர் “பாரதியாரின் வாழ்க்கையைத் திரைப்படமாக இயக்கி வெளியிடுங்கள்!” எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் இயக்குநர் ஞான ராஜசேகரன் பாரதியாரின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கினார்.
இத்திரைப்படத்திற்குப் பிறகு இவர் பெரியாரின் வாழ்க்கையையும், கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கையையும் திரைப்படமாக்கினார். முதலில் பாரதியாரின் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்கத்தான் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன் பின் பட்ஜெட் தொடர்பான சில காரணங்களால் நடிகர் ஷாயாஜி ஷிண்டேவை நடிக்க வைத்தார்கள். இளையராஜா இசையில் உருவான இத்திரைப்படம் கடந்த 2000-ல் ஆண்டு வெளியானது.
தலைவி:
முன்னாள் முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கினார் இயக்குநர் ஏ.எல்.விஜய். இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை கங்கனா ரணாவத் ஏற்று நடித்திருந்தார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெயலலிதா குறித்தான பயோபிக் திரைப்படத்தை எடுக்கலாம் என்ற ஐடியாவோடு இயக்குநர் ஏ.எல்.விஜய்யை அணுகியிருக்கிறார். அதன் பின் திரைக்கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத்தின் உதவியோடு இத்திரைப்படத்தின் திரைக்கதை பணிகளை மேற்கொண்டார்.
800:
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ திரைப்படத்தை இயக்குநர் ஶ்ரீபதி எடுத்திருந்தார். முரளிதரனின் கதாபாத்திரத்தில் ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ புகழ் மாதுர் மிட்டல் நடித்திருந்தார். முதலில் முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதிதான் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் எழுந்த எதிர்மறை விமர்சனங்களைக் கண்டு முத்தையா முரளிதரனே இப்படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு கோரிக்கையை வெளியிட்டார். அதன் பின் விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகினார்.
சூரரைப் போற்று:
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு ‘அமேசான் பிரைம்’ ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம், ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ ஏர்லைன்ஸின் நிறுவனரான கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இத்திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கினார். இத்திரைப்படம் கோபிநாத்தின் முழுமையான பயோபிக் அல்ல. அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருந்தார்கள்.
தற்போது இசைஞானி இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் உருவாகவிருக்கிறது. இளையராஜாவாக நடிகர் தனுஷைப் பார்ப்பதற்குப் பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இவை தவிரவே தமிழில் ஏராளமான பயோபிக் படங்கள் வெளியாகியிருக்கின்றன.
Discussion about this post