கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சரண்யா. அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர், இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு, பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு, அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின்னர், எம்டன் மகன், களவாணி, தென்மேற்கு பருவக்காற்று, ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலையில்லா பட்டதாரி ஆகிய திரைப்படங்களில் அம்மா வேடத்தில் முத்திரை பதித்தார். தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே ஹீரோக்கள் முதலில் தேர்வு செய்வது சரண்யா பொன்வண்ணனை தான் என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில், நடிகை சரண்யா கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி என்ற பெண், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் நடிகை சரண்யா பொன்வண்ணன் வசித்து வருகிறார். இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீதேவியின் வீட்டில், 20 அடி நீள இரும்பு கேட் இருக்கிறது. இந்த கேட்டை திறக்கும் போது, அது, பக்கத்து வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் நடிகை சரண்யாவின் கார் மீது இடிப்பது போல நிற்கிறது.
இதனிடையே, நேற்றைய தினம் (31.03.2024) ஸ்ரீதேவி தங்களது காரை எடுப்பதற்காக கேட்டை திறக்க முயன்றபோது, சரண்யாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நடிகை சரண்யாவும், அவரது குடும்பத்தினரும், ஸ்ரீதேவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, ஆபாசமாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீதேவி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், நடிகை சரண்யா, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள ஸ்ரீதேவி, தகராறு தொடர்பான சிசிடிவி பதிவுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post