அட்சய திருதியை நாளில் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது அற்புதமான யோகத்தை தரப்போகிறது. இந்த நாளில் சூரியன், குரு, ராகு,புதன் ஆகிய கிரகங்கள் மேஷ ராசியில் இணைந்துள்ளன. இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது. எந்த ராசிக்காரர்கள் தங்கம் வாங்க யோகம் கைகூடி வந்துள்ளது என பார்க்கலாம்.
குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சனிக்கிழமை 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த நாளில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்று ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் இணைந்துள்ளார். மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்றிருக்க கூட ராஜ கிரகங்கள் இணைந்துள்ளன. சனி கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. தங்கம் வாங்குவது ஆடம்பர செலவு என்பதை தாண்டி நல்லதொரு முதலீடு என்று நினைத்தால் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கலாம்.
மேஷம்:
லாப சனியோடு உங்களுக்கு ராஜயோகம் தேடி வரப்போகிறது. பொன்னவன் குருவின் அருளினால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளின் திருமணத்திற்கு தேவையான நகைகளை வாங்க நல்ல நாள். அதே நேரத்தில் பஞ்ச பட்சி சாஸ்திர படி வளர்பிறை சனி சரியாக வராதவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அட்சய திருதியை உள்ளது அந்த நாளில் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
ரிஷபம்:
விரைய ஸ்தானமான 12வது வீட்டில் குரு உள்ளிட்ட கிரகங்கள் கூடியிருந்தாலும் ரிஷப ராசியில் உச்சம் பெற்ற சந்திரன் உடன் ஆட்சி பெற்ற சுக்கிரன் இணைந்திருப்பது சிறப்பு. ராஜாதி யோகம்தான். கையில் இருக்கும் பணத்தை சுப செலவாக தங்கம் வாங்கி முதலீடு செய்யலாம்.
மிதுனம்:
லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு உங்களுக்கு அட்சய திருதியை நாளில் பொன்மழையை பொழியச்செய்யப்போகிறார். பண வருமானம் பல வழிகளில் இருந்தும் வரப்போகிறது. வரக்கூடிய வருமானத்தை பிள்ளைகளின் திருமணம், சுப காரியங்களுக்காக பொன்நகையை வாங்கக்கூடிய யோகம் கைகூடி வந்துள்ளது.
சிம்மம்:
உங்கள் ராசிநாதன் சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெற்று குரு உடன் பயணம் செய்வதால் அட்சய திருதியை நாளில் அற்புதமான யோகத்தை தரப்போகிறது. பல வழிகளில் இருந்தும் பணம் வந்து பாக்கெட்டை நிரப்பும். குருவின் துணையால் அட்சய திருதியை நாளில் பிள்ளைகளின் சுப காரியத்திற்காக தங்க நகைகள் வாங்கும் யோகம் கைகூடி வந்துள்ளது.
துலாம்:
உச்சம் பெற்ற சூரியனின் நேரடி பார்வையோடு குரு பகவானின் நேரடியான சுப பார்வையும் உங்களுக்கு கிடைக்கிறது. புதன், ராகுவின் அருள் பார்வையும் கிடைக்கிறது. பண வருமானம் அதிகரிக்கும். பொன்நகைகளை வாங்கி சேமிக்கும் யோகம் வந்துள்ளது. அட்சய திருதியை நல்ல நாளில் அற்புதமான பலன்களை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
விருச்சிகம்:
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திரனின் அருள் பார்வையும், சுக்கிர பகவானின் சுப பார்வையும் அட்சய திருதியை நாளில் கிடைக்கிறது. சேமித்து வைத்திருக்கும் பணத்தில் நீங்கள் பொன்நகைகளாக வாங்குவதை விட வீடு மற்றும் நிலத்தில் முதலீடு செய்யலாம். அட்சய திருதியை நாளில் நீங்கள் செய்யும் முதலீடு பல மடங்காக பெருகும்.
தனுசு:
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே..உங்களின் எண்ணங்கள் வலிமையான வெற்றியை தேடி தரப்போகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானம் உங்களுக்கு வலிமை அடைந்துள்ளது. உச்சம் பெற்ற சூரியனுடன் இணைந்துள்ள குரு பகவானின் அருள் பார்வையும், உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. சொத்து சேர்க்கை ஏற்படும். குருவின் அருளால் பொன்நகைகளை வாங்கும் யோகமும் கைகூடி வந்துள்ளது.
மீனம்:
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடும், மூன்றாம் வீடும் வலிமையாக உள்ளது. அற்புதமான யோகத்தை தரக்கூடிய இந்த நல்ல நாளில் நீங்கள் நீங்கள் செய்யும் முதலீடு பல மடங்காகும். பல வழிகளில் இருந்தும் வரக்கூடிய பணத்தை தங்கம், நிலம், வீடுகளில் முதலீடு செய்யலாம்.






Discussion about this post