தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை வௌிநாடுகளுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கோபா குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் தர மேம்பாட்டிற்காக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த செயலாற்றுகைக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை ஆராயும் நோக்கில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீம் தலைமையில் கூடிய போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்காலத்தில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை மீண்டும் கோபா குழுவின் முன் அழைக்கவுள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் பயிற்றப்பட்ட பணியாளர்களுக்கான தேவை அதிகம் காணப்படுவதுடன் கேள்விக்கேற்ற வகையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை நாட்டிலிருந்து அனுப்ப முடியாமல் உள்ளமை பாரிய பிரச்சினையான உள்ளதென கோபா குழுவின் தலைவர் கபீர் ஹாஷீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 33 வீதத்தை விட குறைவாக காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக் கூற வேண்டிய நிறுவனங்கள் உரிய ஒருங்கிணைப்புடன் சரியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாததே இதற்கு காரணமென்றும் அவர் கூறியுள்ளார்.
தேசிய புலம்பெயர் பணியாளர் தொடர்பான கொள்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை அடிப்படையாக கொண்டு செயற்படாமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக தகுதியுடைய தாதியர்களை அனுப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 425 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் மூவர் மாத்திரமே உரிய மொழித்திறனுடன் இருந்ததாக கோபா குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post