நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டம் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த வழிப்பிள்ளையாருக்கு முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
வழக்கம் போல் பூசாரி கோவிலுக்குச் சென்று பார்த்தபோது உண்டியல் திருட்டு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து இதுகுறித்து ஆலய நிர்வாகத்திடம் தெரிவித்து நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத் திருட்டு சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகவும், அத்தோடு சந்தேகத்தின் பேரில் இப்பிரதேசத்தில் வசிக்கும் 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தைத் திருடியதாக ஒப்புக்கொண்டதாகவும் , இவ்விருவரும் சகோதரர்கள் எனவும் , இவர்கள் உண்டியலை உடைத்த போது 5000/= பணம் இருந்ததாகவும் 4405/= ரூபாவை செலவு செய்து விட்டு 595/= ரூபா பணத்தை மாத்திரம் சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்ததாகவும், இதற்கு முன்னர் நானுஓயா டெஸ்போட் உள்ளிட்ட பல பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்ட இவ்விருவர் மீது நானுஓயா பொலிஸ் நிலையத்தில் மூன்று திருட்டு முறைப்பாடுகள் உள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ. ஜி. சி. ஜனக்க தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, கடந்த ஒரு வாரமாக நுவரெலியா, லிந்துலை, நானுஓயா ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பல பகுதிகளிலுமுள்ள இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியல் பணமும், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களும் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Discussion about this post