நீண்ட விமானப் பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள் முகக்கவசம் அணிவதற்கு நாடுகள் பரிந்துரைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்புக் கூறியுள்ளது.
எக்ஸ்.பி.பி. 1.5 எனும் புதிய ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அமெரிக்காவில் வேகமாகப் பரவும் வேளையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலும் இந்த வைரஸ் திரிபு பரவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகமான கொவிட்–19 பரவல் உள்ள இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு முகக்கவசம் அணிவதற்கான பரிந்துரை விடுக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒமிக்ரோன் வகை வைரஸ் திரிபுகளில் எக்ஸ்.பி.பி. 1.5 மிக வேகமாகப் பரவக்கூடியது.
அமெரிக்காவில் ஜனவரி 7ஆம் திகதி முடிவுற்ற வாரத்தில் பதிவான கொவிட் சம்பவங்களில் சுமார் 28 வீதத்துக்கு அதுவே காரணம்.
புதுவகை வைரஸால் மீண்டும் உலகளவில் நோய்ப்பரவல் ஏற்படுமா என்பது தற்போதைக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறினர்.
எனினும் தற்போதுள்ள தடுப்புமருந்துகள் கடுமையான பாதிப்பையும் மரணத்தையும் தவிர்க்க உதவும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.





Discussion about this post