வட மேற்குப் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் ஒன்றில் இடம்பெற்ற இரட்டை வெடிப்புகளில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் தாக்குதல் ஒன்றுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் பொலிஸார் மின்சார கோளாரினால் இந்த வெடிப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸாராவர்.
ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பகுதி முன்னர் இஸ்லாமியவாத போராட்டக் குழுக்கள் கைவசம் இருந்த நிலையில் அந்தக் குழுக்கள் 2009இல் இங்கிருந்து துரத்தப்பட்டன. வெடிப்புகளால் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதோடு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
பிரதமர் ஷஹ்பாஸ் ஷரீப் ஆரம்பத்தில் இந்த வெடிப்புகளை தற்கொலைத் தாக்குதல் என்று குறிப்பிட்டபோதும், பின்னர், வெடிப்பு எவ்வாறு நேர்ந்தது என்பது பற்றி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். போராட்டக் குழுக்கள் கடுமையாக இயங்கி வரும் இந்தப் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படை வலுவாக நிலைகொண்டுள்ளது.
2012இல் நோபல் பரிசு வென்ற மலாலா யுசுபாசி மீது இந்தப் பள்ளத்தாக்கிலேயே தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post