பெருந்தோட்டங்களில் இடம்பெறும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர சகல தரப்பையும் அழைத்து அவசர மாநாடு ஒன்றை கூட்டுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கேட்டுக்காண்டுள்ளார். அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காவத்தை வெள்ளந்துரை தோட்டம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் முடிவுக்கு வரவில்லை. இதுபற்றி உங்களிடம் தொலைபேசியில் உரையாடிய போது, எழுத்து மூலமான முன்மொழிவை தருமாறு கேட்டிருந்தீர்கள்.
ஜனாதிபதி, பொது நிர்வாக அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, அமைச்சர் டிரான் அலஸ், அரசு-எதிரணி தரப்புகளை சார்ந்த ஒன்பது மலையக எம்பிக்கள், கொழும்பு-களுத்துறை-கேகாலை-இரத்தினபுரி-நுவரேலியா-கண்டி-மாத்தளை-பதுளை-மொனராகலை-காலி-மாத்தறை-குருநாகலை ஆகிய 12 மாவட்டங்களின் செயலாளர்கள், பொலிஸ் மாஅதிபர், 22 பெருந்தோட்ட நிறுவன மேலாளர்கள், உள் குத்தகை பெற்றுள்ள தோட்ட நிறுவன மேலாளர்கள், 03 அரச பெருந்தோட்ட அதிகாரிகள், மலையக சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோரை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து அவசர மாநாட்டை நடத்தி நிரந்தர தீர்வை காணவேண்டும். இரத்தம், வியர்வை சிந்தி நமது நாட்டை வளப்படுத்திய பெருந்தோட்ட மக்கள், இன்று 200 வருடங்களை நிறைவு செய்கின்றனர் .அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. எனது தொகுதி கொழும்பு அவிசாவளை முதல் உட்பட பன்னிரெண்டு மாவட்டங்களில் இம்மக்கள் படும்பாடு மிக மோசமானதாகும். நீதிமன்ற ஆணை இல்லாமல் அவர்களது வீடுகள் உடைக்கப்படுகின்றன.
ஆங்காங்கே நடைபெற்ற சம்பவங்கள் இப்போது பரவலாக நடைபெறுகின்றன. பல சம்பவங்கள் பகிரங்கமாவதில்லை. ஒருசிலவே வெளியில் தெரிய வருகின்றன. தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வசிப்பிட, வாழ்வாதர காணி உரிமை தொடர்பில் நாம் கூடி பேசி முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனோ கணேசன் எம்.பி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.






Discussion about this post