அநூராதபுரத்திலிருந்து – கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பஸ் நடத்துனரை தாக்கிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் கெக்கிராவ பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இருவர் பஸ்ஸை நிறுத்தி நடத்துனர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், அவர் வைத்திருந்த பயணச்சீட்டு இயந்திரத்தையும் பறித்தெடுத்து கீழே அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்களை கைது செய்ய முயற்சி செய்த போதும் சந்தேக நபர் அங்கிருந்து கெக்கிராவ பொது விளையாட்டு மைதானத்தை நோக்கி தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், மற்றைய நபரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






Discussion about this post