இவர் யார் என்று அறிவதற்கு முன் இவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்னும் விடயம் உங்களுக்குத் தெரிய வேண்டாமா?
பெண் என்றால் ஒரு பெருமை இருக்கின்றது. வீட்டிற்குள்ளே கறிச் சட்டிக்குள்ளே காலத்தை வீணாக்கும் பெண்களுக்கு மத்தியில் 10 விரல்களை நம்பி ஜெர்மனிக்குள் புகுந்த கௌசி என்னும் சந்திரகௌரி சிவபாலன் பற்றியே இந்தப் பதிவு எடுத்து வருகின்றது.

இவர் இலங்கையின் கிழக்குப்பிரதேச மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூரில் வேலுப்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார்.திருமணம் என்ற தாலி பந்தம் அவரை பிறந்த நாடாகிய இலங்கையிலிருந்து ஜெர்மனிக்கு அழைத்துக் கொண்டு வந்தது. அகதி வாழ்வு அவளுக்குப் பழக்கப்படவில்லை என்றாலும் தமிழைப் பிரித்து எடுத்து வந்த சோகம் மனதுக்குள் இருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புக் கலைமாணி பட்டத்தைப் பெற்று அதன்பின் கல்வியியல் டிப்ளோமாவையும் கற்றுத் தேறி இலங்கையில் ஆசிரியராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் 9 வருடங்கள் கடமையை மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் வாழ்ந்து வந்தார். தமிழோடு கொஞ்சிய அவருடைய நாவுக்கும் 1994 மார்கழி மாதம் 25 ஆம் ஆண்டு பனிமுட்டிய பாதைகளிலே படர்ந்த அவர் பாதங்களுக்கும் புதிய ஏக்கம் ஏற்பட்டது. புரியாத மொழி, தெரியாத கலாசாரம். அறியாத முகங்கள். வாழ்க்கை இனிக்கப் போகிறதா? கசக்கப் போகிறதா என்ற அச்சம். ஆனாலும் ஏற்றத்தை நோக்கிய விழிகளுக்கு தாழ்வுகள் தஞ்சமடைவதில்லை.

முதலில் மொழிக்குப் பழக்கப்பட்டார், தாய்மைக்கு இடம் தந்தார், கணவனுடைய சொந்த உணவகத்தில் பொறுப்புக்களை ஏற்றார். குழந்தையும் வளர, மொழி ஆற்றலும் வளர, ஜெர்மனிய நட்புக்களும் வளர வாழ வந்த நாடு அவருக்கு வளர்ப்புத் தாய்நாடாக மாறியது. ஆயினும் கருவறை தந்த மொழி தவிக்கும் நிலை புரிந்தது. தாய்நாடாகிய இலங்கையிலே வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் தன்னுடைய எழுத்தைப் பதித்தவர், ஜெர்மனியில் முதன் முதலில் முதலாவது படைப்பாக மண் சஞ்சிகையில் தன்னுடைய எழுத்தைப் பதியமிட்டார். அதனைத் தொடர்ந்து இலண்டன் தமிழ் வானொலியில் இலக்கியங்கள், கவிதை, ஆன்மீக சிந்தனை என்று இரவு பகல் பாராது தமிழோடு கொஞ்சி விளையாடினார், குதூகலமாய் ஆட்டம் போட்டார். காலப்போக்கில் 3 வருடங்கள் ஓடிவிளையாடு பாப்பா என்னும் உலகத் தமிழ் சிறுவர்களின் படைப்புக்களுக்குத் தலைப்பைக் கொடுத்து சிறுவர்களைத் தட்டிக்கொடுத்து விமர்சித்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து தமிழ் மகள் அவளோடு ஒட்டிக்கொண்டார். தனக்கு அவளை ஜெர்மனியில் துணையாக அழைத்துக் கொண்டு சென்றார். யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் யேர்மனி தமிழ் கல்விச் சேவையின் செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து செயற்பட்டார்.
இலக்கியத் தாகம், தமிழ் மூச்சு தணிந்ததா? இல்லை தொடர்ந்தது. தற்போது தமிழ்வான் அவை என்னும் இணையக் கலந்துரையாடலை மாதந்தோறும் நடத்தி வருகின்றார். அத்தளத்தில் இலக்கிய கர்த்தாக்களை அழைத்து, இலக்கிய உரைகளை ஆற்ற வைப்பதுடன், மறைந்த எழுத்தாளர்களை நினைவுறுத்துவது, அவர்களுக்கான ஆவணப்படங்கள் வெளியிடுவதும், தமிழர் கலைகளையும் நாட்டுப்புறக் கலைகளையும் வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதுடன், சமூகம் சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார்.
தமிழ் மகளுக்கு இது மட்டும் போதுமா. அவளோடு இன்னும் சல்லாபிக்கலாமே என்று இந்தியா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, கனடா, போன்ற நாடுகளின் சஞ்சிகையிலும், இலங்கைப் பத்திரிகைகளிலும், வெற்றிமணி பத்திரிகையிலும் படைப்புக்களை வெளிவரச் செய்வதுடன் தன்னுடைய http://kowsy2010.blogspot.com என்னும் வலையிலும், வல்லமை.கொம் என்னும் இணையத்தளத்திலும் இன்னும் சில இணையத்தளங்களிலும் தமிழை இலக்கியமாகவும் கட்டுரையாகவும், சிறுகதை, கவிதையாகவும் எழுதி வருகின்றார். மேடைப்பேச்சுக்களில் கலந்து கொள்ளுகின்றார். வானொலி, தொலைக்காட்சி, சஞ்சிகையில் கௌசியினுடைய பேட்டிகள் இடம்பெற்றிருக்கின்றன.

Ilakkiya maalai, Upayam
என்னும் 2 youtube channel களையும் நடத்தி வருகின்றார். அவற்றில் இலக்கியப் பதிவுகளும் ஆன்மீக அனுபவஙகளும் இடம்பெறுகின்றன.
கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் போன்றன தொடர்ச்சியாக எழுதி வரும் கௌசி அவர்கள் ஆன்மீக வகுப்பில் கலந்து பிரம்மஞானம் கற்று பிரம்மஞானியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆன்மீக உரைகளும் ஆற்றி வருகின்றார்.
ஊதியத் தொழிலாக டிமென்சியா நோயாளிகளுக்கு பயிற்சியளித்து அவர்களுக்கு உதவி புரியும் கல்வியை ஜெர்மனி மொழியில் கற்று ஒரு நிறுவனத்தில் வயதான டிமென்சியா நோயாளிகளுக்குப் பயிற்சியளித்து உதவி புரியும் பணியைத் தன்னுடைய பெற்றோரின் நினைவாக கௌசி அவர்கள் செய்து வந்தார்.
தற்போது திரைப்படத் துறையிலும் தடம்பதிக்கத் தொடங்கியுள்ள கௌசி அவர்கள் இந்திய ஜெர்மனி இணைப்புடன் வெளிவர இருக்கின்ற திரைப்படத்திற்கு துணைத் தயாரிப்பாளராகப் பணிபுரிகின்றார்.
பிரான்சில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து உரையாற்றியமையைப் பெருமையாகக் கருதுவதுடன் தன்னுடைய நூல்களை இலங்கை யாழ்ப்பாணப் பழகலைக் கழக மாணவி ஜனா யோகரெத்தினம் பட்டப் படிப்பு ஆய்வினை ஈடுபடுத்துவதையிட்டும் பெருமை கொள்ளுகின்றார்.அத்துடன் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இவருடைய பனிக்குடம் என்னும் கவிதை நூல் அறிமுகம் செய்தமையும் இவருக்குப் பெருமைக்குரிய விடயங்களாக்கும்.
யாழ் பல்கலைக்கழக மாணவி ஜனா யோகரெட்ணம் தன்னுடைய தமிழ் சிறப்புக்கலைமானி பட்டத்துக்காக கௌசி அவர்களுடைய நூல்களை ஆய்வு செய்து சித்தி எய்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைச் சுற்றி அன்னிய மொழி ஆட்சி செய்தாலும் அன்னிய நாட்டிலும் தன்னுடைய தாய்மொழியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதுடன் அதற்கான அர்ப்பணிப்புக்களைச் செய்து கொண்டிருக்கின்றார்.

இவர் பெற்ற விருதுகள்
- தமிழ்ச்சுடர் – தடாகம் கலை இலக்கிய மன்றம், இலங்கை
- நவயுகக் கவிதாயினி – ஊற்று வலையுலக அமைப்பு, இலங்கை
- வெற்றிமணி விருது – வெற்றிமணி, ஜேர்மனி
- தமிழன்பன் விருது – உலகப்பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா
- இலக்கியமாமணி விருது – செவிலியர் தமிழ்மாமணி இராச வேங்கடேசன்
அறக்கட்டளை – புதுச்சேரி
இவர் இதுவரை 5 நூல்கள் வெளியீடு செய்துள்ளார்
- என்னையே நானறியேன் – நாவல்.
- முக்கோணமுக்குளிப்பு – – கட்டுரைத் தொகுப்பு
- வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைத் தொகுப்பு.
- நான் பேசும் இலக்கியம் – கட்டுரைத் தொகுப்பும்
- பனிக்குடம் – கவிதைத் தொகுப்பு







Discussion about this post