உலகளவில் பலரால் விரும்பப்படும் அழகிய மலரால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். அது எந்த பூ? அதில் அப்படி என்ன பிரச்சனை? விரிவாக பார்ப்போம்.
மாரடைப்பு ஏற்படுத்தும் மலர்: மலர்கள் என்றாலே அதன் மனதை மயக்கும் அழகும், உள்ளங்களை உற்சாகப்படுத்தும் நறுமணமுமே நம்மில் பலரது நினைவுக்கு வரும். ஆனால், பார்ப்பதற்கே பரவசம் தரும் ஒரு அழகிய மலரால் மாரடைப்பு ஏற்படும் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால், அதுதான் உண்மை. கண்களை கவரும் அந்த மலர் செடி நமது ஆசிய கண்டத்திலும், ஐரோப்பிய கண்டத்திலும் அதிகளவில் வளரக்கூடியது. அதன் பெயர் ஃபாக்ஸ் குளோ. டிஜிடாலிஸ் என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படும் அந்த மலர் தாரை இசைக் கருவியின் வடிவத்தில் அவ்வளவு அழகாக இருக்கும்.
உலகம் முழுவம் பூந்தோட்டங்களில் விரும்பி வளர்க்கப்படும் இந்த மலர் பர்பிள், வெள்ளை, பிங்க் என மூன்று நிறங்களில் வளரும். தோட்டங்களை மேலும் அழகுபடுத்துவதற்காக தேடித்தேடி சென்று இந்த மலர் செடிகளை வளர்க்கிறார்கள். இப்படிப்பட்ட மலரில் அழகை விட ஆபத்தே அதிகம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? முடியாவிட்டாலும் அதுவே நிஜம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆம், இந்த மலர் இதயத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுமாம். அப்படி என்ன பாதிப்பு என்பது பற்றி விரிவாக பார்ப்போம். ஆராய்ச்சியாளர் விளக்கம்: இதுகுறித்து லைவ் சைன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜென் வாங் கூறுகையில், “ஃபாக்ஸ் குளோ மலரில் கார்டியாக் கிளைகோசைடு எனப்படும் அதிக சக்திவாய்ந்த சேர்மங்கள் இருக்கின்றன.
இதய தசைகள் இயங்குவதற்கு கார்டியாக்கும், எந்தெந்த சேர்மங்களில் எல்லாம் சர்க்கரை மூலக்கூறுகள் உள்ளன என்பதை காட்டுவதற்கு கிளைகோசைடு உள்ளது. இதயம் ஆயிரக்கணக்கான கார்டியாக் செல்களின் மூலமாக உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்கிறது. அந்த செல்களின் சவ்வுகளில் பல்வேறு அயன் வழிகள், கடத்திகள் இருக்கின்றன.
பொட்டாசியம், சோடியம், குளோரைடு போன்றவற்றை அவை அனுமதிக்கின்றன. இதன் மூலம் மின்னோட்டம் ஏற்படுவதுடன் சோடியம் – பொட்டாசியம் பம்ப் மின் சமநிலையை அடைய வைக்கிறது.
இந்த நிலையில் ஃபாக்ஸ் கிளோவ் மலர்களில் உருவாகும் டிகோஜின் போன்ற கார்டியாக் கிளைகோசைடுகள், இதயத்தில் உருவான சோடியம் – பொட்டாசியம் பம்புடன் மிக மிக அழுத்தமாக ஒட்டிக்கொள்ளும். இதனால் கடத்திகளில் அயான்கள் செல்வது நிறுத்தப்படும். இப்படி பம்பை செயல்படாமல் அது நிறுத்துவதால் கார்டியாக் செல்களில் வேதியியல் பிரச்சனைகள் ஏற்பட்டு இதயத் துடிப்பு மிகவும் வேகமாகவும், மிகவும் கடுமையாகவும் அதிகரிக்கும். ஏன் பிரச்சனை: இதயத்தின் இயல்பு நிலை மாறுபடுவதால் அரித்மியா ஏற்பட்டு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் வரலாம்.
அதே நேரம் அந்த மலர்களில் உருவாகும் டிகோஜின் எனப்படும் வேதிப்பொருள் இதய மருத்துவத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதய செயலிழக்கும் சமயத்தில் டிகோஜின் மருந்தாக மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபாக்ஸ் குளோ செடியின் ஏதாவது ஒரு பகுதி நமது உடலுக்குள் தவறுதலாக சென்றுவிட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.” என அவர் கூறி உள்ளார்.
OID
Discussion about this post