இந்த ஆண்டு நமது காலண்டரில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. வழக்கமான 365 நாட்கள் அல்லாமல் 366 நாட்களுடன் ஆங்கிலத்தில் இருக்கும் ஆண்டு, லீப் ஆண்டு (Leap Year) என்று அழைக்கப்படும் மிகுநாள் ஆண்டாக 2024 இருக்கும்.
ஆண்டின் மிகச்சிறிய மாதத்துக்குக் கூடுதலாக ஒரு நாள் கிடைக்கிறது. பிப்ரவரி 29ஆம் தேதி மிகு நாள் (லீப் நாள்) என்று அழைக்கப்படுகிறது. மூட நம்பிக்கைகளும் கலாசார பாரம்பரியங்களும் இந்த நாளுடன் தொடர்புடையதாக இருக்கின்றன.
மிகுநாள் ஆண்டு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். இதற்கு முந்தைய மிகுநாள் ஆண்டு 2020, அடுத்த மிகுநாள் ஆண்டு 2028.
இதற்கு விதிவிலக்கு உண்டு. அது குறித்து விரிவாகக் கீழே பார்க்கலாம்.
ஏன் மிகுநாள் ஆண்டு நிகழ்கிறது?
ஓர் ஆண்டு என்பது பொதுவாக 365 நாட்களைக் கொண்டது. ஏனென்றால், பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் அவகாசம் இது. ஆனால், 365 என்பது ஒரு தோராயமான எண்ணிக்கை மட்டுமே.
பூமி சூரியனை முழுமையாக ஒருமுறை சுற்றி வர 365.242190 நாட்கள் ஆகும். அதாவது 365 நாட்கள், 5 மணிநேரங்கள், 48 நிமிடங்கள், 56 நொடிகள். இது விண்மீன் ஆண்டு எனப்படும். அதாவது பூமி சூரியனைச் சுற்றிச் சுழலும் உண்மையான கால அளவு. ஆங்கிலத்தில் இதை sidereal year என்பர்.
நாட்காட்டியில் உள்ள 365 நாட்களைவிட மிகுநாள் ஆண்டு சற்று கூடுதலானது. எனவே கூடுதலான இந்த நேரத்தைச் சரிக் கட்டுவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு முழு நாள் நமது நாட்காட்டியில் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. இதன்மூலம், நமது நாட்காட்டி மாறி வரும் பருவங்களுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும்.
மிகுநாள் ஆண்டு பாரம்பரியங்கள் என்ன?
மிகுநாள் ஆண்டுடன் தொடர்புடைய பல பாரம்பரியங்கள் மற்றும் மூட நம்பிக்கைகள் உள்ளன.
திருமணமாகாத ஆண்களுக்கான இந்த தினத்தில், அயர்லாந்து நாட்டு பாரம்பரியத்தின்படி, பெண்கள் ஆண்களிடம் திருமண விருப்பத்தைத் தெரிவிக்கலாம். இது மிகுநாளில் நடைபெறும்.
அயர்லாந்தில் மிகுநாளில் பெண்கள் ஆண்களிடம் தங்கள் திருமண விருப்பத்தைத் தெரிவிக்கும் பாரம்பரியம் உள்ளது.
நாகரிகம் மாறி வரும் காலத்தில் பெண்கள் ஆண்டின் எந்த நாளில் வேண்டுமானாலும் ஆண்களிடம் தங்கள் திருமண விருப்பத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் இந்தக் குறிப்பிட்ட பாரம்பரியம் 5ஆம் நூற்றாண்டில் தொடங்கியது.
தூதர் பிரிட்ஜெட் மற்றும் தூதர் பாட்ரிக் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் புனைவு ஒன்றின் அடிப்படையில் இந்த பாரம்பரியம் தொடங்கியிருக்கலாம். ஆண்கள் தங்கள் திருமண விருப்பத்தைத் தெரிவிக்க வெகு நாட்கள் எடுத்துக் கொள்வதால் பெண்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என தூதர் பிரிட்ஜெட், தூதர் பாட்ரிக்கிடம் புகார் செய்தார். எனவே திருமண விருப்பத்தை வெளிப்படுத்த பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கோரினார் என்று அந்தப் புனைவு அமைந்துள்ளது.
பெண்ணின் திருமண விருப்பம் நிராகரிக்கப்படும்போது, செய்ய வேண்டிய சில சடங்குகளும் உள்ளன. பெண்ணின் விருப்பத்தை ஆண் நிராகரித்துவிட்டால், அந்தப் பெண்ணுக்கு பட்டாடைகள் மற்றும் கையுறைகள் வாங்கித் தர வேண்டும்.
சில பாரம்பரியங்களின்படி, மிகு நாள் துர்திருஷ்டவசமானதாகக் கருதப்படுகிறது. கிரேக்க நாட்டில், மிகுநாள் ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக, மிகுநாளில்.
மிகுநாள் ஆண்டில் செய்யப்படும் திருமணம் முறிந்துவிடும் என்று அங்கு நம்பப்படுகிறது.
பாரம்பரியாக கிரேக்கர்கள், மிகுநாள் ஆண்டில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்ப்பார்கள்.
ஸ்காட்லாந்து நாட்டில், மிகுநாளில் தீங்கு விளைவிக்கும் மந்திரவாதிகள் ஒன்று கூடுவதாக நம்பப்படும் பாரம்பரியம் உள்ளது.
பிப்ரவரி 29ஆம் தேதி குழந்தை பிறப்பதையும் துர்நிகழ்வாக ஸ்காட்லாந்து மக்கள் சிலர் கருதுகின்றனர்.
பிப்ரவரி 29ஆம் தேதி மந்திரவாதிகள் ஏதாவது தொல்லை கொடுப்பர் என்று ஸ்காட் மக்கள் நம்பினர்.
ஆனால் சில கலாசாரங்களின்படி, மிகுநாள் ஆண்டை அதிர்ஷ்டமானதாக பார்ப்பதும் உண்டு.
சில ஜோதிடர்கள், உங்கள் பிறந்த நாள் மிகுநாளாக இருந்தால், நீங்கள் பல சிறப்பான திறமைகள் கொண்டவராக இருப்பீர்கள் என்று நம்புகிறார்கள்.
பிப்ரவரியில் ஒரு நாள் சேர்க்கப்படுவது ஏன்?
மிகு நாள் ஏன் பிப்ரவரி மாதத்தில் அமைகிறது என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்ள, பண்டைய ரோம நாட்டில் ஜூலியஸ் சீசர் நாட்காட்டி சீர்திருத்தங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜூலியன் நாட்காட்டியை சீசர் அறிமுகப்படுத்தினார். சூரிய நாட்காட்டியுடன், வழக்கமான நாட்காட்டி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதால், மிகுநாள் ஆண்டு சேர்க்கப்பட்டது.
ஜூலியன் நாட்காட்டி, கிரிகோரியன் நாட்காட்டியாக 1852ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. எனினும், பிப்ரவரி மாதத்தில் ஒரு மிகுநாள் சேர்க்கப்படும் பாரம்பரியம் மாறவில்லை.
ஜூலியன் மற்றும் கிரிகோரியன் நாட்காட்டிகளில் ஈஸ்டர் தேதிகளைத் தீர்மானிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பித்தளை நிரந்தர நாட்காட்டி.
லீப் ஆண்டே இல்லாவிட்டால் என்ன ஆகும்?
நாம் மிகுநாள் ஆண்டுகளைக் கடைப்பிடிக்காமலும், நாட்காட்டிகளுக்கு இடையே உள்ள சுமார் ஆறு மணிநேரத்தைக் கணக்கில் எடுக்காமலும் இருந்தால், பருவ காலங்கள் தடம் மாறிவிடும்.
உதாரணமாக, சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு, வடக்கு அரைக்கோளத்தில் கோடைக்காலம் ஜூன் மாதத்திற்குப் பதிலாக டிசம்பரில் தொடங்கும்.
நாம் மிகுநாள் ஆண்டுகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், வடக்கு அரைக்கோளத்தில் ஒரு கட்டத்தில் ஜூன் மாதத்தில் குளிர்காலம் நிலவும், அதேநேரத்தில் தெற்கு அரைக்கோளத்தில் கோடைக்காலம் நிலவும்.
மிகுநாள் ஆண்டுகள் எப்போதெல்லாம் வருகின்றன?
பலரும் மிகுநாள் ஆண்டுகள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்றன என்று நினைக்கிறார்கள். ஆனால் அது எப்போதும் உண்மை இல்லை.
இதற்குக் காரணம், ஓர் ஆண்டின் துல்லியமான நீளம் (நாட்கள், மணிநேரங்கள், நிமிடங்கள், விநாடிகள்) நமது நாட்காட்டியின் ஆண்டின் நீளத்திற்குச் சரியாகப் பொருந்தாததுதான். ஓர் ஆண்டின் துல்லியமான நீளம் 365.242222 நாட்கள். ஆனால் நமது நாட்காட்டியில் 365 நாட்கள் மட்டுமே இருக்கின்றன.
இந்தக் குறைபாட்டை சரிசெய்வதற்காகத்தான் மிகுநாள் ஆண்டுகள் இருக்கின்றன. அவற்றின் விதி என்னவென்றால், ஓர் ஆண்டை நான்கால் வகுத்து மீதி இல்லாமல் வந்தால் அது மிகுநாள் ஆண்டாகும்.
இதற்கு ஒரு விதிவிலக்கு: நூற்றாண்டுகள். 100ஆல் வகுத்து மீதி இல்லாமல் வரும் ஆண்டுகள் மிகுநாள் ஆண்டுகள் அல்ல. ஆனால், 400ஆல் வகுத்து மீதி இல்லாமல் வரும் நூற்றாண்டுகள் மிகுநாள் ஆண்டுகள் ஆகும்.
சுருக்கமாகச் சொன்னால், மிகுநாள் ஆண்டுகள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை வராது. 100ஆல் வகுத்து மீதி இல்லாத ஆண்டுகளைத் தவிர்த்து, மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் ஒன்று லீப் ஆண்டாக இருக்கும். நூற்றாண்டுகளில் 400ஆல் வகுத்து மீதி இல்லாதவை மட்டுமே மிகுநாள் ஆண்டுகள்.
சிக்கலாக இருக்கிறதா?
சில எளிமையான உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம்.
2000ஆம் ஆண்டு ஒரு மிகுநாள் ஆண்டாக இருந்தது. ஏனென்றால் அந்த ஆண்டை 4 மற்றும் 400ஆல் வகுத்தால் மீதி இல்லாமல் வந்தது.
ஆனால், 1700, 1800, 1900 ஆண்டுகள் 4ஆல் வகுத்தாலும் 400ஆல் வகுத்தால் மீதி வந்தது. ஆகையால் அவை மிகுநாள் ஆண்டுகள் அல்ல.
அடுத்த முறை மிகுநாள் ஆண்டு தவிர்க்கப்படும் ஆண்டு 2100 ஆகும்.
Discussion about this post