மக்களின் பங்களிப்புடன் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்
நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் எதிர்நோக்கியுள்ள வலுசக்தி விநியோகத்திலான சவால்களுக்கு மத்தியில், வலுசக்தியைச் சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்தி நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அதிகபட்ச பங்களிப்பை வழங்குவது, நிறுவன ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் தற்போது அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் நடைமுறைச் சாத்தியமான நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும், குறிப்பாக அரச சேவைக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டல்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
அதேபோல், உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் வலுசக்தி நுகர்வை முறையான முகாமைத்துவத்திற்கு உட்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரப் பெயர்ப்பலகைகள் மற்றும் ஏனைய அலங்கார மின் கட்டமைப்புகளுக்கு அதிகளவிலான மின்சாரம் செலவிடப்படுவதாகவும், அதனைக் மட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் மின்சார நுகர்வில் குறிப்பிடத்தக்க அளவைச் சேமிக்க முடியும் என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டது.
நகர்ப்புறங்களில் அவசியமற்ற வீதி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்திற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பாகப் பின்பற்றக்கூடிய மாற்று வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து கலந்துரையாடி, விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அதிபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-03-23



Discussion about this post