வரிசை யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நாட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு
வருவதாகவும் அது மேலும் முன்னேற்றமடைய இன, அரசியல்,பிரதேச பேதமின்றி அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றாக இணைந்து கைகோர்த்து பயணிக்க வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாடு முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் அந்த முன்னேற்றத்தை சீர்குலைப்பதற்கென்றே சிலர் செயற்பட்டு வருகின்றனர்.
அண்மையில் இந்திய நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி புன்னக்குடா பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கு நான், நடவடிக்கை எடுத்தேன். அப்படி அது நடந்திருந்தால் அங்கு பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்.
அன்று, இதை எதிர்த்த எதிர்க்கட்சியினர் இந்தியாவிற்கு அந்தப் பகுதியை தாரை வார்ப்பதாக கூறினார்கள்.
எந்த வளங்களும் இல்லாத பல நாடுகள் அபிவிருத்தி அடைந்திருக்கின்றன. அதற்கு வெளிநாட்டு முதலீடுகளே காரணம்.தெற்காசியாவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக முன்னேற்றம் அடைந்த எமது நாடு, இப்போது ஆப்கானிஸ்தானுக்கு பின்னால் நிற்கின்றது.
சந்தர்ப்பவாதிகள், இனவாதிகள், மதவாதிகள், மந்திரக்காரர்கள், சூனியக்காரர்கள் இந்த நாட்டை தொடர்ந்து நாசமாக்குவதிலேயே கருத்தாக செயல்படுகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நல்ல திட்டங்கள் இருந்தன. எனினும் அவருக்கு பின்னால் இருந்த கல்விமான்களை கொண்ட ஒரு அமைப்பு அந்த திட்டங்களை சீர்குலைத்தது.
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?” என்ற பாடலை நினைவுபடுத்த தோன்றுகிறது சகல வளங்களும் எமது நாட்டில் காணப்படுகின்றன. எனினும் இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், மதவாதிகள்,மற்றும் சூனியக்காரர்கள் இந்த நாட்டை நாசமாக்கியிருக்கின்றார்கள்.
இந்த நிலைமை மாற வேண்டும்.
நல்லிணக்கம் என்பது வெறும் பேச்சளவில் இருக்கக் கூடாது. அது நடைமுறைக்கு வர வேண்டும். அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.




Discussion about this post