ஒரு சகாப்தம் விடைபெற்றது. உங்களோடு நான் பகிர்ந்து கொண்ட தருணங்கள் இனிமையானவை, மறக்க முடியாதவை. உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் , முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கத்தின் மறைவையிட்டு அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எமது ஸ்தாபனத்தின் மூத்த தலைவர் என்ற ரீதியில் எமக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த அன்னாரின் இழப்பு எமக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். அவர் தனது அரசியல் பயணத்தை நுவரெலியா பிரதேச சபையின் நியமனத் தலைவராக ஆரம்பித்து படிப்படியாக பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக என தனது அரசியலில் மிகவும் உச்ச நிலையைத் தொட்டவர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்கள் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் மிகவும் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்குமான ஒருவராக அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் பல்வேறு பதவிகளை வகித்ததுடன் இறுதியில் அதன் தலைவராகவும் இருந்து ஓய்வுபெற்றார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.பி.விஜேயதுங்க , சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,மகிந்த ராஜபக்ஷ ஆகிய ஐந்து ஜனாதிபதிகளுடன் இணைந்து செயற்பட்ட ஒருவர். மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் இவரும் ஒருவராவார். 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இவர் பிரதியமைச்சராக இருந்தபோது பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புகளுக்கு மின்சாரத்தை வழங்கி மலையகம் எங்கும் ஒளி பரப்பினார். இதனால் மக்களால் மின்சாரக் கண்ணா என செல்லமாக அழைக்கப்பட்டார். மலையக மக்களின் சார்பாக பல்வேறு வெளிநாடுகளில் இடம்பெற்ற மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் தொழிற்சங்கப் பிரதிநிதியாகச் சென்று அதில் கலந்து கொண்டவர்.
பெருந்தோட்ட மக்கள் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்கள் மற்றும் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளில் முன்னின்று செயற்பட்ட ஒருவர். இவ்வாறு இவரின் செயற்பாடுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அன்னாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்றேன். அன்னாரின் இழப்பு மலையக அரசியல் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்றார்.






Discussion about this post