காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் உலகம் பல்வேறு இயற்கை அழிவுகளை எதிா்கொண்டு வருகிறது. இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் இந்தக் கொடூர அழிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர வேலைத்திட்டம் ஒன்றின் அவசியம் உலகளவில் உணரப்பட்டு வருகிறது.
உலகம் எதிா்கொள்ளும் இத்தகைய அழிவுகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுக்கக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 1995ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை காலநிலை மாநாட்டை (United Nations Climate Change Conference) நடத்தி வருகிறது. இந்த மாநாடுதான் COP என்று அழைக்கப்படுகிறது. COP என்பது கொன்ஃப்ரன்ஸ் ஒஃப் த பார்ட்டீஸ் (Conference of the Parties) என்பதன் சுருக்கமாகும்.
இவ்வருடத்துக்கான 27ஆவது காலநிலை மாநாடு COP27 என்ற பெயரில் எகிப்தின் ஷாா்ம் அல் ஷேக்கில் நவம்பா் 6ஆம் திகதி முதல்18ஆம் திகதி வரை தொடா்ந்து இரண்டு வாரங்களாக
நடைபெற்று வருகிறது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள், காலநிலை மாற்ற
திட்டங்களுக்கான நிதி ஆதாரம், காலநிலை மாற்றத்தைக் குறைப்பதில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றைச் செயற்படுத்துதல் போன்ற 5 முக்கிய அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
கடல் நீரின் மட்டம் உயர்வடைதல், புவி வெப்பமடைதல் போன்ற பல்வேறு காரணங்களால் இயற்கை அனா்த்தங்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன.
இந்த இயற்கை அனா்த்தங்களுக்கு பசுமை இல்ல வாயுக்களின் (Greenhouse gases) அளவு வளிமண்டலத்தில் அதிகரித்திருப்பதே காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
புவியின் வெப்ப நிலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கை இந்த பசுமை இல்ல வாயுக்களான கார்பன்-டை-ஒக்சைட் (carbon dioxide -CO2), மெதேன் (methane (CH4),நைட்ரஜன்–டை-ஒக்சைட் (nitrous oxide- N2O) போன்ற வாயுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்கள், முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதாக உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்து வருகிறது. உலகில் காலநிலை
மாற்றத்தின் விளைவுகளால் 360 கோடி மக்கள் இன்னல்களை அனுபவித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பூமிப்பந்து வரலாறு காணாத அனா்த்தங்களை அரவணைத்துக் கொண்டு அவதிப்படுகின்ற இந்தப் பின்னணியில் தான், எகிப்தில் தொடங்கியிருக்கும் காலநிலை மாநாடு, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த மாநாட்டில் நூற்றுக்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனா். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான செயற்றிட்டங்களையும் பரிந்துரைகளையும்,
முன்னெடுப்புகளையும் பல நாடுகள் முன்வைத்து வருகின்றன.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கியநாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ், “மனித இனம் நரகத்தை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது” என்று
கூறியுள்ளாா்.
“நாம் உடனடியாக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால்,ஏற்படப்போகும் கோர விளைவுகளைச் சரிசெய்ய முடியாது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்.இல்லையென்றால், அழிந்து போக வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைத்தான் நாம் தேர்வுசெய்ய முடியும்” என்று அன்டனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விட்டிருக்கிறாா்.
இந்தியாவின் சாா்பாக அந்நாட்டின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்கிறாா்.
உலக நாடுகள் காலநிலை மாற்றத்தைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளின் வேகம் போதாதென்று கூறியுள்ள பூபேந்திர யாதவ்,. உலகெங்கும் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் பெரிய ஆபத்தாக இருக்கின்றன என்றும். பசிபிக், கரீபியன் பகுதிகளில் வெப்பமண்டலச் சூறாவளிகள் தீவிரமடைந்துள் ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
இதனால், சிறிய வெப்ப மண்டல நாடுகள் வெறும் சில மணிநேரத்தில் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை இழப்பதாகக் கூறிய அவா், இதைச் சமாளிக்க நடவடிக்கை
எடுக்கவில்லையென்றால் பேரழிவு ஏற்படக்கூடும் என்றும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உலக நாடுகள் போதிய நிதி அளிக்கத் தவறி வரும் சூழலில், மனித உயிர்களைக் காக்க இயற்கைப் பேரிடர்கள் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை தரும் அமைப்புகள் தேவை எனவும்
கூறியிருக்கிறார்.
கடந்த வருடம், 2021ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற COP26 மாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் மோடி, பருவநிலை மாற்றத்தை
எதிர்கொள்ள ஐந்து அம்சங்கள் கொண்ட‘பஞ்சாமிர்த’ திட்டத்தை முன்வைத்திருந்தார்.
இந்த ‘பஞ்சாமிர்த’ உறுதிமொழியின் ஒரு பகுதியாக, இந்தியாவின் பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாட்டை நிகர பூச்சிய நிலைக்குக் கொண்டு செல்வதற்கான செயல் திட்டத்தை
பிரதமர் நரேந்திர மோடி அன்று அறிவித்திருந்தாா்.
இந்தத் திட்டத்தின் படி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை 2030-க்குள் 500 ஜிகாவோட்டாக எட்டுதல், 2030ஆம் ஆண்டில் எரிசக்தி தேவைகளில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றலில்
இருந்து பெறுவது, 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தை ஒரு பில்லியன் தொன்கள் குறைப்பது. 2030-க்குள், பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தை 45 சதவீதத்துக்கும் குறைவாக குறைப்பது. 2070ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிகர பூச்சிய இலக்கை
அடைவது உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்திருந்தார்.
இவ்வருட COP27 காலநிலை மாநாட்டில், 2070 ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் உமிழும் வேகத்தை நிகர பூச்சிய நிலைக்குக் கொண்டு செல்வதற்கான நீண்ட கால உறுதி மொழி திட்டத்தை இந்தியா சமா்ப்பித்துள்ளது.
இந்தத் திட்டம், நீண்ட கால குறைந்த உமிழ்வு மேம்பாட்டு உத்தி ( ‘Long Term Low Emission Development Strategy’ (LT-LEDS) என அழைக்கப்படுகிறது.
இது 121-பக்க ஆவணமாக முன்வைக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி மற்றும் போக்குவரத்து போன்ற பல் துறைகளின் மூலம் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளிப்பாட்டில் மூலோபாய
மாற்றத்தை உடனடியாக கொண்டு வருவதில் இந்தத் திட்டம் கவனத்தைச் செலுத்தியுள்ளது.
நகரமயமாக்கல் மற்றும் தொழில்துறைகளினால் வளிமண்டலத்துக்கு ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல், காடுகளை பாதுகாத்தல் போன்ற திட்டங்களையும் இந்த ஆவணம் உள்ளடக்கியிருக்கிறது.
சூழல் பாதுகாப்பு தொடா்பான நிதி முதலீடுகள், ஆராய்ச்சி, ஆகியவற்றை மேம்படுத்துவதிலும் இந்தியாவின் இந்த உறுதி மொழி வெளியீடு கவனம் செலுத்தியிருக்கிறது.
மாநாட்டில் இந்தியாவால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த உறுதிமொழி வெளியீட்டின் மூலம், ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டுக்கு (United Nations Framework Conventionon Climate Change- UNFCCC) நீண்டகால உத்திகளை சமர்ப்பித்துள்ள 60க்கும் குறைவான நாடுகளின் பட்டியலில்
இந்தியாவும் இணைந்துள்ளது என்று இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறியுள்ளார்.
இந்தியா காலநிலை மாற்றம் தொடா்பான செயற்பாடுகளில் தனது
நிலைப்பாட்டை இந்த மாநாட்டில் தெளிவுபடுத்தியுள்ளது.
இதன் படி, தன்னுடைய கார்பன் உமிழ்வை 2030ஆம் ஆண்டுக்குள் 45 சதவீத அளவிற்கு குறைத்தல்.
2030ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 50 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல். காடுகள் மற்றும் மரங்கள் வளர்ப்பை அதிகப்படுத்தி 2.5 முதல் 3 பில்லியன் தொன் மதிப்பிலான கார்பன் டை ஒக்சைட் உமிழ்வை வளிமண்டலத்தில் மட்டுப்படுத்தல்.
காலநிலை நீதி மற்றும் நிலையான வாழ்க்கை முறைகள் (Climate Justice and Sustainable Lifestyles) ஆகிய இரண்டு கருப்பொருள்களுடன் இணைந்து செயற்படுவது தொடா்பாக தமது மூலோபாய திட்டத்தில் மிகவும் வலியுறுத்தப்படுகின்றன என்று இந்திய சுற்றுச் சூழல் அமைச்சா் யாதவ் கூறியுள்ளார்.
பாரிஸ் உடன்படிக்கையின் (The Paris Agreement) கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தும் செயல் திட்டத்தில், பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை 2 பாகை
செல்சியஸுக்கும், முன்னுரிமை நிலையான 1.5 பாகை செல்சியஸுக்கும் எப்படிக் குறைப்பது என்பது குறித்த பொறி பறக்கும் விவாதங்களுக்கு இடையே இந்தியாவின் காலநிலை
தொடா்பான இந்த உறுதி மொழியுடனான முன்மொழிவு காத்திரமானதாக அமையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது தொடா்பாக, உலக எரிசக்தி அமைப்பு (World Energy Outlook) வெளியிட்டுள்ள ஓா் அறிக்கையில், 2070 ஆம் ஆண்டுக்குள் வளிமண்டலத்துக்கு உமிழும் வாயுக்களின் அளவை நிகர
பூச்சிய நிலைக்கு கொண்டு செல்வதற்கான இந்தியாவின் இலட்சியம் உலகளாவிய புவி வெப்பத்தை கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்று கூறிப்பிட்டுள்ளது.
இந்தியா உட்பட வளரும் நாடுகள், வளிமண்டலத்தின் மீது உமிழப்படும் வாயுக்களின் அளவை 1.5 பாகை செல்சியஸாக குறைத்து, 2050ஆம் ஆண்டுக்கு முன் வாயுக்களின் உமிழ்வை
பூச்சிய நிலையை அடையும் இலக்கைத் தொட வேண்டும் என்று சகல தொழிற்றுறை நாடுகளையும் கோரியுள்ளன.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து உலகை மீட்டெடுப்பதற்கு கடுமையான மாற்றங்களை அவசரமாகவும், உடனடியாகவும் செயல்படுத்தாவிட்டால் புவியின் வெப்பம் 2.3
பாகை செல்சியஸைத் தாண்டும் அபாய நிலை இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
2032 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவும் தனது அணுசக்தி திறனை மூன்று மடங்கு அதிகரித்து, தனது உற்பத்தித் திறனை விரிவுபடுத்த தயாராகவிருப்பதாக இந்திய அமைச்சர் யாதவ் கூறியுள்ளார்.
இந்தியாவின் மின்சார உற்பத்தியில் பெரும் பகுதி நிலக்கரியைச் சார்ந்துள்ளது.
மின்சாரத்தில் சுமார் 20 சதவீதம் மட்டுமே புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது. இந்தியா அதன் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் நீண்ட கால காலநிலை இலக்குகளின் ஒரு பகுதியாக, அதன் புதுப்பிக்கத்தக்க உற்பத்தித் திறனை 50 சதவீதமாக அதிகரிக்க
உறுதியளித்துள்ளது.
“இந்தியாவின் இந்த முன்வைப்புகள் ஓர் உயிருள்ள திட்டமாக பார்க்கப்படவேண்டும். எதிர்கால நகா்வுகள்
2070க்குள் நிகர-பூச்சியத்தை நோக்கி வலுவான, வெளிப்படையான திட்டங்களை வலியுறுத்த வேண்டும், இது தொடா்பாக ஏனைய நாடுகளுடனான விரிவான கலந்துரையாடலை வலியுறுத்த வேண்டும்” என்று புது டில்லியை தளமாகக் கொண்ட கொள்கை ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் (The Centre for Policy Research) பேராசிரியர் நவ்ரோஸ் துபாஷ் குறிப்பிட்டுள்ளாா்.
இந்தக் கொள்கை ஆராய்ச்சி மத்திய நிலையம், காலநிலை மாற்றம் தொடா்பாக இந்தியாவுக்கான நீண்ட கால திட்டத்தை தொகுத்து வழங்கிவருவது மட்டுமல்லாமல் தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்கி வருகிறது.
கடந்த மாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காலநிலை மாற்றத்தை எதிா்த்துப்
போராட சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (Lifestyle for Environment – LiFE)
என்ற ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை(LiFE) என்ற இந்தத் திட்டம் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட இயற்கை வள பாதுகாப்பு திட்ட பங்களிப்புகளில் குறிப்பிடக் கூடிய ஒன்றாகும்.
ஒவ்வொரு தனி நபருக்கும் அவரவர் திறனுக்கு ஏற்ப சூழலை
பாதுகாப்பதற்கான தூண்டுதலை சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (LiFE) என்ற இந்தத் திட்டம் வழங்குகிறது.
மின் தூக்கிகளைத் தவிா்த்து,படிக்கட்டுகளைப் பயன்படுத்தல், பயணத்துக்கு சைக்கிள்களைப் பயன்படுத்துதல், வளங்களை மறு பயன்பாடு செய்தல், தேவையில்லாத போது மின்சாரத்தை நிறுத்துதல், அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல் போன்றவை சுற்றுச்சூழலுக்கு சாதகமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கான சில வழிகளை இந்தத் திட்டம் காட்டி
வருகிறது.
தொழிற்றுறையில் வளர்ச்சியடைந்த நாடுகளிடமிருந்து வெளியிடப்படும் கரியமில வாயு புவியை வெப்பமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
என்றாலும், இதனால் ஏற்படும் விளைவுகள் வறிய நாடுகளையே அதிகம் பதம் பாா்க்கின்றன.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை புரிந்து கொண்ட பல நாடுகள் புதைபடிம எரிபொருட்களை பயன்படுத்துவதை விட்டு விட்டு சூரிய ஆற்றலைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
இந்தியாவும் சூரிய ஆற்றலை பயன்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியப் பிரதமர் மோடி, சூரிய ஒளியால் இயங்கும் ஒரு கிராமத்தை அண்மையில்
குஜராத்தில் தொடங்கி வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
Discussion about this post