எதிர்வரும் புதன்கிழமை வரை சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தையொட்டி எரிவாயுவுக்கு பெருமளவு கேள்வி உள்ள நிலையில் ஓடர் செய்யப்பட்டுள்ள எரிவாயுவுடனான கப்பல் இலங்கைக்கு வருவது தாமதமாகும் நிலையிலேயே மேற்படி மட்டுப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் சமையல் எரிவாயுக் கப்பல்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாகவும் அதனை கப்பலிலிருந்து இறக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் வழமைபோன்று சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், லிற்றோ கேஸ் நிறுவனமென்ற வகையில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு ஒருபோதும் இடமளிக்காது. எனினும் எதிர்வரும் பண்டிகைக்காலங்களுக்காக பாரியளவு சமையல் எரிவாயு எமக்கு தேவைப்படுகிறது.
அதற்கிணங்க டிசம்பர் மாதத்திற்காக 34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயு ஓடர் செய்யப்பட்டுள்ளது. அதிலொரு தொகை எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஜனவரி வரை பல கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.
நாம் 42,000 சிலிண்டர்களை இதுவரை சந்தைக்கு விநியோகித்துள்ளோம். சில பிரதேசங்களில் அதற்கான குறைபாடு நிலவலாம். நாம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தற்போது விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதே அதற்குக் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






Discussion about this post