சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) கடனை பெறுவதற்காக நினைத்துப் பார்க்க முடியாத நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் அரசு இணக்கத்தை வெளியிடும் என்று அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் நேற்று (03) தெரிவித்துள்ளார்.
தற்போது ஸ்தம்பித்திருக்கும் முக்கிய நிதி உதவியை புதுப்பிக்கும் கடைசி பேச்சுவார்த்தைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வரும் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் வரவுள்ளனர்.
வரும் ஒக்டோபரில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வரி அதிகரிப்பு மற்றும் மானியங்களை குறைக்கும் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பாகிஸ்தான் அரசு நிராகரித்திருந்தது.
“நான் விபரித்துக் கூறாதபோதும் எமது பொருளாதாரம் முகம்கொடுக்கும் சவால் கற்பனை செய்துபார்க்க முடியாதது. சர்வதேச நாணய நிதியத்தின் நினைத்துப்பார்க்க முடியாத நிபந்தனைகளுக்கு நாம் இணங்க வேண்டி ஏற்படும். ஆனால் நிபந்தனைகளுடனேயே அவைகளுக்கு இணக்கம் வெளியிடப்படும்” என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷரீப் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் மற்றும் மோசமடையும் பாதுகாப்பு பிரச்சினைக்கு மத்தியில் அதிக அளவான வெளிநாட்டு கடன்களை செலுத்த முயற்சிப்பதால் பாகிஸ்தான் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் டொலர் வரை குறைந்திருப்பதாக பாகிஸ்தான் மத்திய வங்கி கடந்த வியாழனன்று தெரிவித்தது. இது மூன்று வாரங்களுக்கும் குறைவான காலத்திற்கான இறக்குமதிகளுக்கு மோதுமான அளவு என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் வருடாந்திர பணவீக்கம் கடந்த புதன்கிழமை 48 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சம் பெற்றிருக்கும் சூழலில் அடிப்படை உணவுப் பொருட்களை வாங்கவும் மக்கள் அவதிப்படுகின்றனர்.





Discussion about this post