ஜார்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தன் கணவர் முன்னிலையில் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தின் தீவிரம் கருதி, மாநில முதல்வர் சம்பாய் சோரன் இந்த முழு விவகாரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜார்கண்ட் டிஜிபி அஜய் குமார் சிங், “இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டுவார்கள்,” என்று தெரிவித்தார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் ஜார்கண்டின் காவல்துறை நிர்வாகத்தையும் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
இன்ஸ்டாகிராம் வீடியோவில் கணவன்–மனைவி வேதனை
பிரேசிலில் பிறந்த ஸ்பானிய பெண்ணான ஹியானா, அவரது கணவர் ஜான்(இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) உடன் மார்ச் 2ஆம் தேதியன்று காலை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் இணைந்து பயன்படுத்தும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். வீடியோவில், ஹியானாவும் ஜானும் தங்களுக்கு நடந்த சம்பவம் குறித்த தகவல்களை வழங்குகிறார்கள். அவர் ஸ்பானிய மொழியில் பேசியுள்ள அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “எங்களுக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. என்னை ஏழு பேர் பாலியல் வல்லுறவு செய்தனர். அவர்கள் எங்களை அடித்து, கொள்ளையடித்தனர். அவர்கள் வேறு எதுவும் செய்யவில்லை, ஏனெனில் அவர்களுக்கு என்னை வல்லுறவு செய்வதே நோக்கமாக இருந்தது. நாங்கள் மருத்துவமனையில் காவல்துறையுடன் இருக்கிறோம். இந்தச் சம்பவம் எங்களுக்கு இந்தியாவில் நடந்தது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு வீடியோவில் ஜான், “எனது முகம் சேதமடைந்துள்ளது. ஆனால், ஹியானாவின் நிலை என்னைவிட மோசமாக உள்ளது. அவர்கள் என்னை ஹெல்மெட்டால் பலமுறை அடித்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவள் ஜாக்கெட் அணிந்திருந்தாள். ஆகையால் அவளுக்குக் காயம் சிறிதளவு ஏற்பட்டது,” என்று கூறியுள்ளார்.
அந்தக் காணொளிகளில், இருவரின் முகத்திலும் பல இடங்களில் காயங்கள் காணப்படுகின்றன. இந்த வீடியோ மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, ஹியானா, “விசாரணையில் சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்பதால், வழக்கு குறித்த தகவல்களை வெளியிட காவல்துறை மறுப்பதாக” தனது தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தின் சுயவிவரத்தில் உள்ள ஸ்டேடஸில் பதிவிட்டார்.
BBC





Discussion about this post