• ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை
மாலைதீவு குடியரசின் கௌரவ ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, அவரது பாரியார் சாஜிதா முகமது மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட மாலைதீவு பிரதிநிதிகள் குழுவை இலங்கைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சொர்க்கத்தைப் போன்றதொரு அழகான நாடு என்று தயக்கமின்றி குறிப்பிடக்கூடிய மாலைதீவிற்குச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு 2025 ஜூலை மாதம் கிடைத்தது. எமது இரு நாடுகளுக்கும் இடையிலான முறையான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மேற்கொண்ட அந்தப் பயணத்தின் போது, இலங்கைக்கு அரச விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு மாலைதீவு ஜனாதிபதிக்கு நான் அழைப்பு விடுத்தேன். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்காக அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இலங்கையும் மாலைதீவும் ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கின்ற அழகான இரண்டு நாடுகளாகும். விருந்தோம்பல் பண்பும், மனிதாபிமானமுள்ள இதயங்களும் கொண்ட மக்கள் வாழும் இரு தேசங்கள் இவை. எமது இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் 1965 ஜூலை 26 ஆம் திகதி தொடங்கின. மாலைதீவு சுதந்திரம் பெற்ற முதல் நாளிலிருந்தே இது ஆரம்பமானது. இருப்பினும், அந்தத் தொடர்புகள் உத்தியோகபூர்வ காலத்தையும் தாண்டி பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டிருக்கின்றன.
வரலாற்றுப் பதிவுகளின்படி, இளவரசன் விஜயனுடன் வந்த குழுவின் ஒரு பகுதியினர் குடியேறிய இடம் மாலைதீவு என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. அதன்படி பார்க்கும்போது, நமது உறவுகள் நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் நெருக்கமான கலாசாரம், மொழி ரீதியான பிணைப்புகள் வரை பல நூற்றாண்டுகள் பழமையானவை. இவை அனைத்தும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக, இந்த வரலாற்று உறவுகள் நமது பிராந்தியத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பொதுவான அபிலாஷைகளை அடைவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளன.
வர்த்தக பன்முகத்தன்மை என்பது இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளின் ஒரு வலுவான அங்கமாகும் என்பதை நினைவுபடுத்த வேண்டும். குறிப்பாக, சார்க் நாடுகளுக்கிடையில் இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய ஏற்றுமதி இலக்காக மாலைதீவு திகழ்கிறது என்பதை மரியாதையுடன் சுட்டிக்காட்டுகிறேன். இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தொடர்ச்சியான மக்கள் தொடர்புகள் மற்றும் நெருக்கமான நட்பு ரீதியிலான இருதரப்பு உறவுகளுக்குச் சான்றாகும். இந்த நெருக்கமானது எமது இரு நாடுகளும் ஒன்றிணைந்து, புரிந்துணர்வுடன் முன்னோக்கிச் செல்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
காலநிலை, மனிதப் பண்புகள், பொருளாதாரம், கலாசாரப் பன்முகத்தன்மை, வாழ்க்கை முறை மற்றும் விருந்தோம்பல் என இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளும்போது, நமது இரு நாடுகளுக்கும் இடையே பல ஒற்றுமைகளும் நெருக்கங்களும் உள்ளன. எமக்கிடையே உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், மாலைதீவு ஒரு சமவெளியான அழகான நிலப்பரப்பாக இருப்பதும், இலங்கை மலைத்தொடர்களைக் கொண்ட அழகான நிலப்பரப்பாக இருப்பதும்தான் என்று நான் கருதுகிறேன்.
நமது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நெருக்கமான உறவில் மிகவும் இதயம் கனிந்த பல அனுபவங்கள் உள்ளன. குறிப்பாக, அண்மைக் காலத்தில் இலங்கை எதிர்கொண்ட மிகவும் துரதிர்ஷ்டவசமான இயற்கை அனர்த்தமான டித்வா சூறாவளிக்குப் பிறகு, மாலைதீவு அரசாங்கமும் மக்களும் எங்களுக்குப் பக்கபலமாக இருந்த விதத்தை இந்தத் தருணத்தில் கௌரவத்துடன் நினைவு கூர்கிறேன்.
தனது அண்டை நாடு ஒரு அனர்த்தத்தையோ அல்லது துன்பத்தையோ எதிர்கொள்ளும் போது, அதில் உடனடியாகத் தலையிட்டு உதவும் முன்னுதாரணத்தை மாலைதீவும் அந்நாட்டு மக்களும் செயலில் நிரூபித்துள்ளனர். அவர்கள் வழங்கிய அந்த மகத்தான ஒத்துழைப்பு மற்றும் தாராள மனப்பான்மைக்காக, ஜனாதிபதி முய்சுவுக்கும், மாலைதீவு அரசாங்கத்திற்கும் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனர்த்த காலத்தில் எங்களை நோக்கி நீட்டப்பட்ட அந்த உதவிக்கரங்களை இதயபூர்வமான ஆழ்ந்த கௌரவத்துடன் நினைவு கூர்கிறேன். ஜனாதிபதி முய்சுவும் நானும் தூதுக்குழுவினருடன் இணைந்து நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது, எமது பன்முக உறவுகளின் தற்போதைய நிலை குறித்து மீளாய்வு செய்தோம்.
குறிப்பாக, உலகளாவிய அரசியல் மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும் எமது இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு அச்சுறுத்தலாகவும் பிரச்சினையாகவும் மாறியுள்ளன. அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்காக சர்வதேச ரீதியில் எமது இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது குறித்து நாம் கவனம் செலுத்தினோம். கடல் மட்ட உயர்வு மற்றும் புவி வெப்பமடைதலுக்கு எதிராக மாலைதீவு ஒரு பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்தப் போராட்டத்தில் மாலைதீவின் நம்பிக்கைக்குரிய ஒரு நட்பு நாடாக நாம் செயற்படுவோம் என்பதை நினைவுகூருகின்றேன்.
எமது இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பரம் நன்மைகளை வழங்குவதற்காக, பல துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது மற்றும் பன்முகப்படுத்துவது குறித்த வழிகள் குறித்து நாம் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். குறிப்பாக சுற்றுலா, கல்வி, உயர்கல்வி மற்றும் சுகாதாரம், விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தி, ஆவணக்காப்பகம், பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
பிராந்தியத்தின் ஒரு முக்கிய பொருளாதார பங்காளியாக மாலைதீவை இலங்கை அங்கீகரிப்பதுடன், மாலைதீவுடனான இந்த பங்களிப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, மீன்பிடி மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்கள், சுற்றுலா மற்றும் ஓய்வுகால வசதிகள், அத்துடன் ஆதன விற்பனை மற்றும் நகர உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளில் இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு மாலைதீவு வர்த்தக நிறுவனங்களுக்கு நான் அழைப்பு விடுத்தேன்.
நாளை, அதாவது மே 5ஆம் திகதி நடைபெறவுள்ள வர்த்தக மன்றத்தின் வெற்றிக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இது எதிர்வரும் நாட்களில் பல பயனுள்ள கூட்டாண்மைகளுக்கு வழிவகுக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
கடலை வாழ்விடமாகக் கொண்ட தீவு நாடுகள் என்ற ரீதியில், எமது வாழ்க்கை முறையும் முன்னேற்றமும் பெருமளவில் கடலிலேயே தங்கியுள்ளன என்பதை நாம் நினைவுகூர வேண்டும். இந்தச் சூழலில், மீன்பிடித் துறையில் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்மொழிவுகளை முன்வைத்தமைக்காக நான் ஜனாதிபதி முய்சுவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாலைதீவு கைத்தொழில் மீன்பிடி நிறுவனத்தின் (MIFCO) கீழ் தயாரிக்கப்பட்ட மீன்பிடித் தயாரிப்புகளை கொழும்பில் அறிமுகப்படுத்தும் நிகழ்விற்கு ஜனாதிபதி முய்சு தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்வு வெற்றியடையவும், பயனுள்ள கூட்டாண்மைகளை கட்டியெழுப்பவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பரஸ்பர நன்மைகளுக்காக குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ள படகு தயாரிப்புத் துறையில், ஒத்துழைப்புக்கான மேலதிக வாய்ப்புகளை ஆராய்வதில் இலங்கை கொண்டுள்ள ஆர்வம் குறித்து நான் ஜனாதிபதி முய்சுவுக்குத் தெரிவித்தேன்.
அதேபோல், மாலைதீவின் சுற்றுலாத்துறையின் வெற்றியானது இலங்கையிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுற்றுலாப் பயணிகள் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளையும் ஒரு ‘இரட்டை இலக்கு’ பயணமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். மாலைதீவின் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்துள்ள பல இலங்கை நிறுவனங்கள் உள்ளன. எனவே, சுற்றுலாத்துறையின் பலன்களை நமது இரு நாடுகளும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை ஆராய்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மாலைதீவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே சிறந்த வான்வழித் தொடர்பு நிலவுகிறது. விமான சேவைகள் மற்றும் கடல்வழித் தொடர்புகளில் நிலவும் ஒத்துழைப்பானது, நமது இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் முக்கியமான சுற்றுலாத் துறைக்கு வலுசேர்க்கும் என நான் நம்புகிறேன்.
இன்று காலை எமது கலந்துரையாடலின் போது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினோம். இலங்கையும் மாலைதீவும் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இரண்டு நாடுகளாகும். நமது இரு நாடுகளும் பெரும்பாலும் பொதுவான தாக்கங்களையே எதிர்கொள்கின்றன. பல்வேறு கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு நமது நாடுகளும் நமது கடல் எல்லைகளும் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நாம் கூட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்தச் சிறப்பான சந்தர்ப்பத்தில், இலங்கையிலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்திற்காகக் கொழும்பில் ஒரு காணியை இலங்கை ஒதுக்கியுள்ளதையும், அதற்குப் பதிலாக மாலைதீவின் மாலே நகரில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்காக ஒரு காணியை மாலைதீவு ஒதுக்கியுள்ளதையும் நான் அறிவிக்க விரும்புகிறேன். இது தொடர்பான ஒப்பந்தங்களை நிறைவு செய்வதற்கு இரு நாடுகளும் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இறுதியாக, இலங்கைக்கான இந்த விஜயத்தை மேற்கொண்டமைக்காக ஜனாதிபதி முய்சு, அவரது பாரியார் மற்றும் தூதுக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் எமது நாட்டிற்கு வருகை தந்திருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பங்களிப்பிற்கு அடிப்படையாக அமையும், நல்லெண்ணம், நம்பிக்கை மற்றும் நட்புறவைப் பிரதிபலிக்கின்றது. இந்த விஜயமானது எதிர்வரும் ஆண்டுகளில் எமது உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் என நாம் நம்புகிறோம்.
ஒவ்வொரு ஆக்கபூர்வமான செயல்பாட்டிற்கும், உங்களது இரண்டாவது இல்லமாகிய எமது நாட்டின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்பதை நினைவூட்டுகின்றோம்.
• மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவின் உரை..
இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஆழமான வரலாறு, தாங்கும் திறன் மற்றும் நட்பின் வெளிப்பாடாக விளங்கும் கொழும்பு நகரில் இருக்கும் வாய்ப்பு கிட்டியது கௌரவமாகும்
என்னையும், என் துணைவியாரையும், என் தூதுக்குழுவையும் அன்போடு வரவேற்றதற்காக ஜனாதிபதி திசாநாயக்கவுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருகை நமது நெருங்கிய அண்டை நாட்டு உறவை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையே புதுப்பிக்கப்பட்ட மற்றும் முன்னோக்கிய கூட்டுறவின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
ஜனாதிபதி திசாநாயக்க மற்றும் எனக்கு இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பரந்த விஷயங்களை உள்ளடக்கிய மிகவும் பயனுள்ள கலந்துரையாடல்கள் நடைபெற்றன. வர்த்தகம் மற்றும் முதலீடு, சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாடு, மீன்பிடி, சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய முக்கிய துறைகளில் நமது கூட்டுறவை மேம்படுத்துவதற்கு நாம் உடன்பாடொன்றை எட்டினோம்.
உயர்கல்வி மற்றும் பயிற்சி, ஆவணக் காப்பக ஒத்துழைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கியமான பல உடன்படிக்கைகளை இன்று நாம் கைச்சாத்திட்டோம். இந்த உடன்படிக்கைகளை செயல்படுத்துவதிலும், அவற்றின் பயன்களை நமது மக்களுக்கு நடைமுறையில் உறுதிப்படுத்துவதிலும் இப்போது நாம் கவனம் செலுத்துகிறோம்.
இன்றைய நமது கலந்துரையாடலின் முக்கிய தூணாக விளங்கியது பொருளாதார ஒத்துழைப்பாகும். மாலைத்தீவின் வளர்ச்சிக்கு இலங்கையர்கள் ஆற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும், இலங்கையில் வசிக்கும் மாலைதீவு மக்களின் முக்கிய பங்கையும் நான் மிகவும் பாராட்டுவதாக தெரிவித்தேன்.
எதிர்காலத்தை நோக்கி, வர்த்தக மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கும், முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குவதற்கும், புதிய வணிக வாய்ப்புகளை திறப்பதற்கும் நாம் உறுதிபூண்டுள்ளோம். நாளை நடைபெறவுள்ள மாலத்தீவு-இலங்கை வணிக ஒன்றியம் இரு நாடுகளின் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் புத்தாக்குநர்களை இணைக்கும் முக்கிய மேடையாக அமையும். மாலைத்தீவு வங்கியின் (Bank of Maldives) கிளையொன்றை இலங்கையில் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தரமான மாலைத்தீவு மீன்பிடி உற்பத்திகளை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட விரிவான முன்முயற்சிகளையும் நாம் ஆராய்ந்து வருகிறோம்.
அத்துடன், நமது பொருளாதார உறவை மேலும் சமமான, நியாயமான மற்றும் பரஸ்பர நலனுக்கு உகந்ததாக உறுதிப்படுத்தி, தற்போதுள்ள வர்த்தக சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் நான் வலியுறுத்தினேன்.
கல்வி மற்றும் இளைஞர் மேம்பாடு நமது தேசிய முன்னுரிமைகளில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பதால், உயர்கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சி, எதிர்காலத் தொழில்களுக்கான திறன் மேம்பாடு, நிறுவன கூட்டுறவு மற்றும் அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு நாம் உடன்பட்டோம். நமது இலக்கு தெளிவானது: வேகமாக மாறிவரும் உலகில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு தேவையான திறன்களுடன் நமது இளைய தலைமுறையை தயார்படுத்த வேண்டும்.
தீவு நாடுகளாக நமது எதிர்காலம் இந்தியப் பெருங்கடல் மூலம் ஒன்றோடொன்று பிணைந்துள்ளது. நிலையான மீன்பிடி முகாமைத்துவம், கடல் வளங்களைப் பாதுகாப்பது மற்றும் கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்ற பொதுவான உறுதிப்பாட்டை நாம் மீண்டும் உறுதிசெய்தோம். கூட்டு பயிற்சிகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் இலங்கை வழங்கும் தொடர்ச்சியான ஆதரவை மாலைத்தீவு மிகவும் மதிக்கிறது. கொள்கை மற்றும் பொருளாதாரத்திற்கு அப்பால், நமது உறவு மக்கள், கலாச்சாரம் மற்றும் பொதுவான மரபுரிமை என்பவற்றில் வேரூன்றியுள்ளது. கலாச்சார பரிமாற்றம், கல்வி ஒத்துழைப்பு மற்றும் சமூக மேம்பாட்டு முன்முயற்சிகள் மூலம் உறவுகளை விரிவுபடுத்துவதற்கு நாம் உடன்பட்டோம். இந்த உறவுகள் நமது அசைக்கமுடியாத நட்பின் அடித்தளமாக தொடர்ந்து நிலைத்திருக்கும்.
காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்தும் நாம் முக்கியமான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம், அது இரு நாடுகளின் இருப்புக்கே அச்சுறுத்தலாக விளங்குகிறது. எனவே வலுவான சர்வதேச ஆலோசனை, கூட்டிணைந்த சுற்றுச்சூழல் முன்முயற்சிகள் மற்றும் காலநிலை தாக்குப்பிடிக்கும் திறனுக்குரிய கூட்டு நடவடிக்கைகளுக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம்.
மதிப்பிற்குரிய விருந்தினர்களே, மாலைத்தீவு-இலங்கை உறவுகளில் புதிய மற்றும் மாறுபட்ட அத்தியாயத்தின் தொடக்கம் இன்று குறிக்கப்படுகிறது. இந்தக் கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பொதுவான செழிப்பை உருவாக்குவதற்கும் மாலைத்தீவு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.
நமது மக்களுக்கு உண்மையான பலன்களை வழங்கும் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை செய்யும் கூட்டுறவை கட்டியெழுப்ப நாம் இணைந்து செயலாற்றுவோம்.




Discussion about this post